சென்னை: இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்ல… பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

அதிகரிக்கும் விபத்து:

2021-ம் ஆண்டு சென்னையில் நடந்த சாலை விபத்துகளில், 611 பேர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 3,294 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். விபத்து ஏற்பட்டவர்களில் 477 பேர் தலைக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள். அதேபோல, 134 பேர் பின்னிருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள்.

கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், இருசக்கர வாகன விபத்துகளில் 841 பேர் காயமடைந்திருக்கின்றனர். இவர்களில் 741 பேர் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர்கள், 127 பேர் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள்.

தலைக்கவசம் கட்டாயம்

சென்னையில் மட்டும், இந்த மே மாதம் 1 முதல் 15-ம் தேதி வரை மட்டும் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்துகளில் மொத்தம் 98 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் ஹெல்மெட் அணியாமல் பயணித்தவர்கள் 80 பேர். பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் 18 பேர் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்போர், படுகாயமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், இத்தகைய விபத்துகளை தடுக்க சென்னை முழுவதும் சிறப்பு வாகன தணிக்கையை போலீஸார் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

தீவிர சோதனை:

சென்னையில் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்திருக்கும் நிலையில், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்காக, சென்னையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு வாகன தணிக்கை நடைபெற்றுவருகிறது. இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர், “இந்தச் சிறப்பு வாகன தணிக்கை இன்று மட்டுமின்றி தொடர்ந்து நடைபெறும்.

தலைக்கவசம் கட்டாயம்

அனைவரும் தலைக்கவசம் அணியும்வரை, இந்த வாகனத் தணிக்கை தொடரும். இதுவரை தலைக்கவசம் அணியாத 2,200 பேர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. இவர்களில் 1,250 பேர் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள். அதிக வழக்குகளைப் பதிய வேண்டும் என்பது எங்களின் நோக்கம் கிடையாது. பொதுமக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்துகொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாலை விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.