கோவை நாச்சிபாளையத்தில் நடைபெற்ற அரிசி வியாபாரி கொலையில் உறவினர் முருகன் என்பவர் கைது, முருகனின் மனைவியுடன் தகாத உறவை ராமநாதன் கைவிடாததால் வெட்டிக் கொலை செய்ததாக முருகன் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
நேற்று குடோனில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ராமநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அரிசி வியாபாரம் செய்து வந்த ராமநாதனுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழில் போட்டியில் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
தொடர்ந்து நேற்று ராமநாதன் குடோனுக்கு வந்து அவரை யாரெல்லாம் சந்திக்க வந்தனர் என்பது பற்றி அந்த பகுதியினரிடம் விசாரித்தனர். அப்போது ராமநாதனின் பெரியப்பா மகனும், தம்பி முறையுமான முருகன் (35) என்பவர் வந்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து முருகனிடம் நடைபெற்ற விசாரணையில் முருகன் ராமநாதனை வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். முருகனின் மனைவியுடன் ராமநாதனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த முருகனும், உறவினர்களும் ராமநாதனை கண்டித்துள்ளனர். தம்பி மனைவியுடனான தொடர்பை துண்டிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் ராமநாதன், தம்பி மனைவியுடனான தொடர்பை கைவிடாமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகன், மதுரையில் இருந்து கோவைக்கு வந்து திட்டமிட்டு ராமநாதனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இந்த தகவல்களை முருகன், போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் முருகனை கைது செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM