Monkeypox பரவல் அபூர்வமானது என குறிப்பிட்டுள்ள பிரித்தானிய மருத்துவர் ஒருவர் அறிகுறிகள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் சுகாதாரத்துறை திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், 20 பேர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பாதிப்பு தினமும் கண்டறியப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் முதலில் அடையாளம் காணப்பட்ட Monkeypox பரவல் தற்போது ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் மற்றும் அவுஸ்திரேலியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, 12 நாடுகளில் 92 பேர்களுக்கு Monkeypox பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மேலும் 28 நாடுகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரித்தானிய மருத்துவர் Hilary Jones தெரிவிக்கையில், 65 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 20 பேர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கவலைப்படும் எண்ணிக்கை அல்ல என்றார்.
இருப்பினும் 11 நாடுகளில் குரங்கம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது அபூர்வமானது என்றார்.
ஆனால் பிரித்தானிய மக்கள் அறிகுறிகள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.
காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, மூட்டு மற்றும் தசை வலிகள் மற்றும் கொப்புளங்கள் என ஏற்பட்டால் கண்டிப்பாக உரிய சோதனைகள் மேற்கொள்ள அவர் பரிந்துரைத்துள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்ட மூன்று நாட்களுக்கு பின்னர் கொப்புளங்கள் ஏற்படலாம் எனவும், பிறப்புறுப்பு பகுதி உட்பட உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதற்கு முன்பு இது பெரும்பாலும் முகத்தில் காணப்படும் எனவும் Hilary Jones குறிப்பிட்டுள்ளார்.
இதன் பாதிப்பானது இரண்டில் இருந்து நான்கு வாரங்கள் வரையில் நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Monkeypox பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஒருவரை நேரிடையாக தொடர்பு கொண்டவர்கள் கண்டிப்பாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.