டோக்கியோ: ”சீனா தைவானை ஆக்கிரமிக்க முயன்றால், அந்நாட்டிற்கு ராணுவ ரீதியில் உதவி செய்வோம்,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய, ‘குவாட்’ அமைப்பின் கூட்டம், ஆசிய நாடான ஜப்பானில் நடக்கிறது. இதில் பங்கேற்க டோக்கியோ வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளதாவது: கிழக்காசிய நாடான தைவானை ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகின்றது. தைவான் வான் எல்லைகளில், சீன விமானங்கள் அத்துமீறி நுழைகின்றன. மேலும், தீவு நாடான தைவானை, தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ராணுவத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்துள்ள போருக்கு, ரஷ்யா கடும் விலையை கொடுக்க நேரிடும். இதுபோன்ற சூழ்நிலை சீனாவுக்கும் ஏற்படும். தைவானுக்கு இதுவரை நாங்கள் நேரடியாக எந்த உதவியும் செய்ததில்லை. இருப்பினும், மற்றொரு போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. சீனா அத்துமீறினால், தைவானுக்கு ராணுவ ரீதியில் நாங்கள் அனைத்து உதவிகளும் செய்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங்க் வென்பின் கூறியுள்ளதாவது: தைவான் எங்கள் நாட்டின் ஒரு பகுதி. அதனுடனான பிரச்னை, எங்களுடைய உள்நாட்டு பிரச்னை. இதில், மற்றவர்கள் தலையிடுவதை ஏற்க முடியாது. எங்கள் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதி செய்ய, 140 கோடி சீனர்கள் தயாராக உள்ளனர். எங்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தோ – பசிபிக் வர்த்தக ஒப்பந்தம்
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த, 12 நாடுகளுடன் அமெரிக்காவின் வர்த்தக உறவை உறுதி செய்யும் புதிய ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது. இந்தோ – பசிபிக் பொருளாதார வரையறை என்ற பெயரிலான இந்த ஒப்பந்தத்தில், ஆஸ்திரேலியா, இந்தியா, புருனே, ஜப்பான், தென் கொரியா ஆகியவை கையெழுத்திட்டுள்ளன. மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா ஆகியவையும் இதில் இணைந்துள்ளன.
முன்னதாக, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து, ஜோ பைடன் பேச்சு நடத்தினார். ”மற்ற உலக நாடுகளைப் போலவே, அமெரிக்காவும் பொருளாதார பிரச்னைகளை சந்தித்து வருகின்றது. இது, சிறிது காலத்துக்கு இருக்கும்,” என, ஜோ பைடன் குறிப்பிட்டார்.