திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே நாதம்பாளையத்தில் பாறைகுழியில் குளிக்கச் சென்ற இளம்பெண், சிறுமி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பெருமாநல்லூர் அருகே நெருப்பெரிச்சலை சேர்ந்தவர் கருப்புசாமி மனைவி உமா (28). அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் மாணவி ஈஸ்வரன் மகள் காவ்யா (15). இவர்களது வீட்டின் அருகே வசிக்கும் 5-க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் நெருப்பெரிச்சல் அருகே உள்ள நாதம்பாளையம் பாறைகுழியில் குளிப்பதற்காக இன்று காலை சென்றனர். அப்போது எதிர்பாராவிதமாக, கால் தடுக்கி சிறுமி காவ்யா, உமா ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத்துறையினர், நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சில மணிநேர போராட்டத்துக்கு பின், இளம்பெண் உமாவின் சடலத்தை மீட்டனர். சிறுமி காவ்யாவின் உடலை தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இது தொடர்பாக பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.