புதுடில்லி,-நம் நாட்டில் தண்டவாளங்களை தகர்க்க, அண்டை நாடான பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது.
இம்மாநில எல்லைக்கு அருகில் உள்ள பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவது பரவலாக நடக்கிறது. நம் பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து அதை தடுத்து வருகின்றனர்.இந்நிலையில், பஞ்சாபில் தண்டவாளங்களை தகர்க்க, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு திட்டம் தீட்டியுள்ளதை நம் உளவு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக சரக்கு ரயில் இயக்கப்படும் தண்டவாளங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்தில், நம் ராணுவத்தின் முக்கிய தகவல்களை திரட்டி, பாக்.,கின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பிடம் அளித்த பஞ்சாப் போலீசார் ஜாபர் ரியாஸ், ஷம்ஷத் ஆகிய இருவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜாபர் ரியாஸ், 2005ல் பாகிஸ்தானிய பெண் ரபியாவை திருமணம் செய்துள்ளார். இருவரும் ராணுவ கட்டடங்கள் மற்றும் வாகனங்களை புகைப்படம் மற்றும் ‘வீடியோ’ எடுத்து பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்பிடம் கொடுத்ததை ஒப்புக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் தான், ரயில் தண்டவாளங்களை தகர்க்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement