திருபுவனை,-திருபுவனையில் உள்ள ‘ஸ்பின்கோ’ நுாற்பாலையில் ரூ.10 லட்சம் மதிப்புடைய 40 மின் மோட்டார்கள் திருடு போனது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, அனைத்து தொழிற்சங்கத்தினர் மில் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி அரசுக்கு சொந்தமான கூட்டுறவு நுாற்பாலை (ஸ்பின்கோ), திருபுவனையில் செயல்பட்டு வருகிறது.இந்த மில்லில் சமீபத்தில் தொழிலாளர்களுக்கு 15 நாட்கள் ‘லே-ஆப்’ வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, மில் வழக்கம்போல் இயங்கி வருகிறது. நுாற்பாலையில் இயந்திரங்களை இயக்க, தேவைப்படும் போது பயன்படுத்த ஏதுவாக 40 மின் மோட்டார்கள் அங்குள்ள ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டு இருந்தன.இந்த நிலையில் நேற்று ஸ்டோர் ரூமை திறந்து பார்த்தபோது, ரூ.10 லட்சம் மதிப்புள்ள 40 மின் மோட்டார்களும் திருடுபோய் இருப்பதை அறிந்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் மில்லின் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் பரவியது.அதையடுத்து, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தொழிலாளர்கள் நேற்று மாலை 3.45 மணியளவில் மில் எதிரே, புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்பின்கோ நுாற்பாலைக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். மின் மோட்டார்கள் திருட்டு குறித்து, போலீசில் புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மில் வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள 36 கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருபுனை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, 4.00 மணியளவில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.மறியலால் அப்பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement