திருக்கனுார்,-மணலிப்பட்டு கிராமத்தில் நில அளவை மற்றும் பதிவேடு துறை சார்பில், வீடுகளுக்கு சொத்து அடையாள அட்டை வழங்குவதற்கான கள ஆய்வுப் பணி நேற்று நடந்தது.புதுச்சேரி வருவாய் பேரிடர் துறை, நில அளவை மற்றும் பதிவேடு துறை மூலம், கடந்த ஆண்டு மணலிப்பட்டு கிராமத்தை ‘ட்ரோன்’ மூலம் சர்வே செய்து, துல்லியமான வரைபடம் பெறப்பட்டது.இதையடுத்து, வீடுகளுக்கான சொத்து அடையாள அட்டை வழங்குவது தொடர்பான கள ஆய்வுப் பணி நேற்று நடந்தது. இப்பணியினை வில்லியனூர் சப் கலெக்டர் ரிஷிதா குப்தா துவக்கி வைத்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.இதில், நில அளவை மற்றும் பதிவேடு துறை இயக்குனர் ரமேஷ், வில்லியனுார் தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன், கொம்யூன் பஞ்சாயத்து இளநிலைப் பொறியாளர் ஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகள், ஒவ்வொரு வீடாக சென்று கள ஆய்வு பணி மேற்கொண்டனர்.ஆய்வின்போது, வீடுகளுக்கான சொத்து விபரங்கள், முக்கிய ஆவணங்கள் சரிபார்க்கப் பட்டன. தற்போது வீடுகளில் வசிப்போரிடம் சொத்து அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.மணலிப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் 60 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. அதில் 35 வீடுகள் மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 25 வீடுகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Advertisement