திருவனந்தபுரம்: கேரளாவில் வரதட்சணை கொடுமையால் ஆயுர்வேத பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த வழக்கில் கணவன் குற்றவாளி என்று கொல்லம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியை சேர்ந்தவர் திரிவிக்ரமன் நாயர். அவரது மகள் விஸ்மயா (24). அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு படித்தார். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கும், கொல்லம் அருகே போருவழி பகுதியை சேர்ந்த ஆர்டிஓ இன்ஸ்பெக்டரான கிரண்குமாருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 100 பவுன் நகைகள், ₹10 லட்சம் ரொக்கம், கார் உள்பட பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. ஆனால் கூடுதல் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண்குமார் அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக விஸ்மயாவின் வீட்டினர் போலீசில் புகார் செய்திருந்தனர்.இந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் 21ம் தேதி விஸ்மயா, கணவர் வீட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். தங்களது மகளின் மரணத்திற்கு கிரண்குமார் தான் காரணம் என்று விஸ்மயாவின் பெற்றோர் போலீசில் புகார் கூறினர். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வரதட்சணை கொடுமைக்கு ஆயுர்வேத பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தன்னை கணவன் கொடுமைப்படுத்துவதாக தந்தையிடம் அழுபடி விஸ்மயா கூறும் ஆடியோவும், அவரிடம், கணவன் கிரண்குமார் விலை உயர்ந்த கார் ஏன் தரவில்லை என்று கேட்டு கோபமாக பேசும் ஆடியோவும் போலீசாருக்கு கிடைத்தது. இதை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்திருந்தனர்.இந்த நிலையில் கொல்லம் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விஸ்மயா தற்கொலையில் கணவன் கிரண்குமார் குற்றவாளி என்று நீதிபதி சுஜித் தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் நாளை (இன்று) அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.மீண்டும் கைதுவிசாரணை நீதிமன்றத்திலும், கேரள உயர்நீதிமன்றத்திலும் கிரண்குமார் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தான் கிரண்குமாருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை கொல்லம் நீதிமன்றம் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கிரண்குமாரை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653347435_Tamil_News_5_24_2022_44590396.jpg)