ஜப்பானியர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு| Dinamalar

டோக்கியோ,-”இந்தியாவின் வளர்ச்சியில் ஜப்பானை இன்றியமையாத கூட்டாளியாக கருதுகிறோம். ”எங்கள் நாட்டின் வேகம், ஈர்க்கக்கூடிய ஊக்கத் தொகைகள், துணிச்சலான சீர்திருத்தங்கள், எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றால் இந்தியாவில் ஜப்பானியர்கள் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் தற்போது நிலவுகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ‘குவாட் மாநாடு’ ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக நம் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.

இரண்டு நாள் பயணம்

இந்நிலையில், இந்தியா – ஜப்பான் உறவு குறித்து அந்நாட்டின் பிரபலமான, ‘யோமியுரி ஷிம்பன்’ நாளிதழில் பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கட்டுரை நேற்று வெளியானது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:கடந்த சில ஆண்டுகளில், உற்பத்தி துறை, சேவைகள், விவசாயம் மற்றும் ‘டிஜிட்டல்’ தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆகியவற்றில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கான பயணத்தை இந்தியா துவக்கி உள்ளது. எங்கள் தொடர்ச்சியான மாற்றத்தில், ஜப்பானை இன்றியமையாத கூட்டாளியாக கருதுகிறோம்.

இந்தியாவின் வேகம், ஈர்க்கக்கூடிய ஊக்க தொகைகள், துணிச்சலான சீர்திருத்தங்கள், எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றால் ஜப்பானியர்கள் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் தற்போது நிலவுகிறது.’ஸ்டார்ட் அப்’ எனப்படும் புதிய சிந்தனைகளை உடைய துறைகளில் இந்தியா முதன்மையாக விளங்குகிறது. இதில் ஜப்பானின் முதலீடு முக்கிய பங்கு வகிக்கிறது. மஹாராஷ்டிராவின் மும்பை – குஜராத்தின் ஆமதாபாத் இடையேயான, ‘புல்லட்’ ரயில் திட்டத்தில் ஜப்பானின் பங்களிப்பு உள்ளது.


1.08 லட்சம் கோடி ரூபாய்

மொத்தம் 1.08 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயும், இரு மாநில அரசுகள் தலா 5,000 கோடி ரூபாயும், மீதித் தொகையை 0.1 சதவீத வட்டியில் ஜப்பானும் அளிக்கின்றன.எனவே, இந்தியாவின் பொருளாதார மாற்றத்தில் ஜப்பானுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, ஐ.பி.இ.எப்., எனப்படும், இந்தோ – -பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்குவது தொடர்பான விவாதத்துக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.அப்போது, இந்தோ- – பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார சவால்களைச் சமாளிக்க பொதுவான மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டறிவதன் அவசியத்தை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இந்தோ – -பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பில் இணையும் அனைத்து நாடுகளுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் இந்தியாவின் உறுதியை பிரதமர் வெளிப்படுத்தினார்.

இந்தியர்களுடன் உரையாடல்

டோக்கியோவில் வசிக்கும் இந்திய வம்சாவளி யினர் இடையே பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:புத்தர் காட்டிய வழியை உலகம் இன்றைக்கு பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது. வன்முறை, அராஜகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் என உலகம் இன்று எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து மனிதகுலத்தை காப்பாற்ற அதுவே வழி. பல ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து, இந்த நாட்டின் கலாசாரத்தை உள்வாங்கி இருந்தாலும், இந்திய கலாசாரத்தின் மீதான உங்கள் ஈடுபாடு வளர்ந்து வருவது கண்டு மகிழ்கிறேன்.நீங்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டும்; இந்தியாவுடன் இணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொழிலதிபர்களுடன் சந்திப்பு!

ஜப்பானின் தொழில் அதிபர்களை சந்தித்து பிரதமர் மோடி நேற்று உரையாடினார். முதலாவதாக அந்நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான என்.இ.சி., கார்ப்பரேஷனின் தலைவர் நொபுஹிரோ என்டோவை சந்தித்தார். பின், ஜப்பானின் முன்னணி ஜவுளி நிறுவனமான, ‘யுனிக்ளோ’வின் தலைமை செயல் அதிகாரி டடாஷி யனாயை சந்தித்தார். இதை தொடர்ந்து, ‘சாப்ட்பேங்க்’ அதிபர் மசாயோஷி மற்றும், ‘சுசுகி மோட்டார்ஸ்’ நிறுவன அதிபர் ஒசாமு சுசுகி ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து அவர்களுடன் மோடி உரையாடினார்.

latest tamil news

சிறுவனுக்கு பாராட்டு

டோக்கியோ சென்ற பிரதமர் மோடிக்கு, ஜப்பானில் உள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, பல சிறுவர் – சிறுமியர் பதாகைகளை ஏந்தி மோடியை வரவேற்றனர். அதில் ஒரு சிறுவன் தமிழில் ‘வணக்கம்’ என்ற பதாகை வைத்திருந்தான். அதைக் கண்ட பிரதமர் மோடி உற்சாகமடைந்தார். சிறுவனின் வரவேற்பை ஏற்று, பதாகையில் கையொப்பமிட்டார். மேலும் சிறுவர் – சிறுமியரிடம் கை குலுக்கி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.