சென்னை அருகே தனியார் கட்டுமான நிறுவனத்தினரிடம், 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், 2ஜி வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்சாவின் நெருங்கிய நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அவதூறு பரப்பி மிரட்டியதாக, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கெவின் என்பவர் மீது, அந்நிறுவனம் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
அந்தப்புகாரில், “50 லட்சம் ரூபாய் கொடுத்தால் அவதூறு செய்தி வெளியிடாமல் இருப்பேன் என்று கெவின் கூறியதாகவும். பணம் தரவில்லை எனில் வார இதழ் மற்றும் யூட்யூப் சேனல், டுவிட்டர் மூலம் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதை மிரட்டியதாகவும் கெவின் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பணம் பறிக்க முயன்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து கெவினை கைது செய்தனர்.
மேலும், அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள கெவின், 2ஜி வழக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவின் நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படுகிறது.