குவாஹாட்டி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா (53) தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: மதரசாக்கள் இருக்கக் கூடாது என நான் எப்போதும் கூறி வருகிறேன். ஏனெனில், அங்கு முறையான கல்வியைவிட மத போதனைக்குதான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. குழந்தைகளுக்கு குரானை சொல்லிக் கொடுக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் அறிவியல், கணிதம் மற்றும் இதர பாடங்களையும் சொல்லித் தர வேண்டும். இந்த வார்த்தை (மதரசா) மறைந்து போக வேண்டும்.
இந்த கல்வி முறை இருக்கும் வரை, ஒரு குழந்தையால் மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ ஆக வேண்டும் என சிந்திக்க முடியாது. மருத்துவர், பொறியாளராவதால் என்ன பலன் என குழந்தைகளிடம் கூறினால், அவர்கள் மதசராக்களுக்கு செல்ல விரும்ப மாட்டார்கள். மதரசாக்களில் குழந்தைகளை சேர்ப்பது மனித உரிமையை மீறும் செயல் ஆகும். இவ்வாறு முதல்வர் ஹிமந்தா கூறியுள்ளார்.
மதரசாக்களை மூட வேண்டும் அல்லது பள்ளிகளாக மாற்ற வேண்டும் என 2020-ல் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.