ஜெட்டா: கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு மக்கள் செல்வதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக பல்வேறு நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே கரோனா பரவல் அதிகரித்தபோது உலக நாடுகள் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதித்தன. அத்துடன் மற்ற நாடுகளுக்கு விமான போக்குவரத்தையும் நிறுத்தின. இதுகுறித்து சவுதி அரேபியா பிறப்பித்துள்ள உத்தரவில், இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய 16 நாடுகளுக்கு சவுதி அரேபியாவில் இருந்து பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், தங்கள் நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை எனவும் இதுகுறித்து கண்காணித்து வருவதாகவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிந்து, அதற்கு முறையான சிகிச்சை அளிக்கும் வசதிகள் சவுதி அரேபியாவில் உள்ளது என அந்நாட்டு நோய் தடுப்பு துறைக்கான துணை அமைச்சர் அப்துல்லா அசிரி தெரிவித்து இருக்கிறார்.
2,022 பேர் பாதிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 2,022 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,459 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2,099 பேர் குணமடைந்தனர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,99,102 ஆக உயர்ந்துள்ளது. 14,832 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை பொதுமக்களுக்கு 192.38 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.