விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். விருதுநகர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “உதய்பூரில் 3 நாள்கள் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சியில் ஐந்து முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. மேலும் பிரசாத் கிஷோர் சொல்வது மாற்றங்கள் இல்லை. பிரசாந்த் கிஷோர் காசு கொடுத்ததால் ஆலோசனை சொல்லும் ஆலோசகர் மட்டுமே. ஆலோசனையை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பதை காசு கொடுக்கும் காங்கிரஸ் கட்சித்தான் முடிவு எடுக்கும்.
மேலும் வாய்க்கு வந்ததை பேசுவது பிரசாத் கிஷோர் வழக்கமாக கொண்டிருக்கிறார். தமிழக பா.ஜ.க-வில் வெறும் 18 நபர்கள் இருக்கின்றனர். கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன் எனக்கூறி அண்ணாமலை சீன் போடுகிறார். 2014-ம் ஆண்டு இருந்த பெட்ரோல்-டீசல் விலை அளவுக்கு விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். அப்படியில்லையெனில் 2014-ம் ஆண்டில் இருந்த பெட்ரோல்-டீசல் விலையை கொண்டுவர வலியுறுத்தி தீ குளிப்பேன் என மோடியிடம் கூற அண்ணாமலை தயாரா?. மேலும் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தான் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை குறைத்துள்ளது.
பேரறிவாளனின் விடுதலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எப்போதும் ஒரே நிலைப்பாடு தான். ஆனால் பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவதும் அவரை ஒரு தியாகி போல நடத்துவதும் எந்த விதத்தில் நியாயம். மேலும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க.கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுத்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளது.
கூட்டணியில் இருப்பதால் தி.மு.க. சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்வது எங்கள் வேலை இல்லை. அதேபோல் காங்கிரஸ் சொல்வதை ஏற்றுக் கொள்வது தி.மு.க.வின் வேலை இல்லை. சீமான் பா.ஜ.க.வின் ‘பி’அணியாகத்தான் செயல்படுகிறார். பேரறிவாளனின் விடுதலை பா.ஜ.க.வால் நடத்தப்படும் சதி. அதில் முக்கிய கதாபத்திரம் சீமான் தான்” என்றார்.