வண்டியை தள்ளுவதில் சிரமம்… மனைவிக்கு மோட்டார் சைக்கிளை பரிசளித்த பிச்சைக்காரர்!

மூன்று சக்கர சைக்கிள் வண்டியை தள்ளுவதற்கு தனது மனைவி சிரமப்படுவதால் அவருக்கு ரூ.90 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை பிச்சைக்காரர் ஒருவர் பரிசளித்திருக்கிறார்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் அமர்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சாஹு (58). பிறவிலேயே இரு கால்களும் செயலிழந்த இவர், கடந்த பல வருடங்களாக அந்த கிராமத்தில் பிச்சை எடுத்து வருகிறார். சாஹுவுக்கு உதவி செய்யும் வகையில், அவரது மனைவி முன்னி, அவரை மூன்று சக்கர சைக்கிளில் அமர வைத்து அந்த கிராமம் முழுவதும் தள்ளிக் கொண்டு செல்வார். இதனிடையே, கடந்த சில மாதங்களாக முன்னிக்கு உடல்நலக்குறைவு காரணமாக மூன்று சக்கர சைக்கிளை தள்ளுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிறிது தொலைவு தள்ளினாலே அவருக்கு மூச்சிரைப்பு ஏற்படும் சூழல் உருவாகியது. இருந்தபோதிலும், தனது கணவருக்காக சைக்கிளை தொடர்ந்து தள்ளி வந்திருக்கிறார்.
இதனை கவனித்த சாஹு, பல ஆண்டுகளாக தனது மனைவி அனுபவித்து வரும் இந்த கஷ்டத்தில் இருந்து அவருக்கு விடுதலை கொடுக்க நினைத்தார். இதற்காக, அவருக்கு தெரியாமலேயே தனக்கு யாசகமாக கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை சிறுக சிறுக சேமித்து வைத்து வந்தார். இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.90 ஆயிரத்தை சேர்த்த சாஹு, அந்தப் பணத்தில் புதிய மொபட் ஸ்கூட்டரை வாங்கி பரிசாக வழங்கினார். இப்போது அந்த தம்பதி, மூன்று சக்கர சைக்கிளில் செல்வதற்கு பதிலாக மொபட்டில் சென்று சென்று யாசகம் பெற்று வருகின்றனர்.
image
தற்போது அவர்கள் புதிய மோட்டார் சைக்கிளில் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிச்சைக்காரர் என்ற போதிலும், தனது மனைவியின் வலியை உணர்ந்து, தனக்கு கிடைக்கும் சிறிய வருமானத்தை பத்திரப்படுத்தி அவருக்கு மொபட் பைக் வாங்கிக் கொடுத்ததற்ககாக சாஹுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.