சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசால் சீர்காழியில் அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பின்றி, பழுதடைந்து, மூடிக்கிடக்கும் அவலநிலை மிகுந்த மன வேதனை அளிக்கிறது. தமிழிசையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபத்தை செயல்படாத நிலைக்கு தள்ளியுள்ள திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
கடந்த 2013-ம் ஆண்டு அன்றைய அதிமுக அரசால் தமிழிசையின் வரலாற்றைப் போற்றும் விதமாக அதை வளர்த்தெடுத்த தமிழிசை மூவருக்குச் சீர்காழியில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அந்த மணிமண்டபம் தற்போது பழுதடைந்து, இயங்கா நிலையில் உள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஊடாகத் தமிழ், தமிழ் என்று பேசி ஆட்சியைப் பிடித்த தி.மு.க.வின் தற்போதைய ஆட்சிக்காலத்தில், முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழைப் போற்றும் மணிமண்டபத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் கூடத் தரப்படாமையால் மணிமண்டபம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் பெருந்துயரம்.
ஆகவே, சீர்காழியில் அமைந்துள்ள தமிழிசை மணிமண்டபம் மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.