கொழும்பு: இலங்கையில் இன்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 24.3 வீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு என்பது இதுவரை இல்லாத ஒன்றாகும்.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
அந்நியச் செலாவணியை செலுத்த முடியாத சூழலில் இலங்கை உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது. இந்திய மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் பெட்ரோலிய பொருட்களை இலங்கை வாங்கி வருகிறது. இதனால் மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மீண்டும் விலை உயர்வு
இந்தநிலையில் அந்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 24.3 வீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் ஒரே நாளில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது எப்போதும் இல்லாத உயர்வாகும். ஏப்ரல் 19 ஆம் தேதி விலை உயர்ந்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்நாட்டில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அங்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஆக்டோன் 92 பெட்ரோல் ஒரு லிட்டர் இலங்கை ரூபாய் மதிப்பில் பெட்ரோல் விலை 420 ரூபாயும் (1.17 அமெரிக்க டாலர்) டீசல் 400 ரூபாயும் (1.11 அமெரிக்க டாலர்) உயர்த்தப்பட்டள்ளது.
இதுகுறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் ‘‘எரிபொருள் விலை இன்று அதிகாலை 3 மணி முதல் மாற்றப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற குழு எரிபொருள் விலை உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உயர்வை கணக்கில் கொண்டு விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்களை உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இறக்குமதி செலவு, இறக்குமதி செய்து நிலையங்களுக்கு விநியோகம் செய்யும் செலவு, வரி உள்ளிட்டவை இதில் அடங்கும். ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் அல்லது மாதந்தோறும் விலையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம்’’ எனக் கூறினார்.
தட்டுப்பாட்டால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அவதிப்படுவதால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இலங்கை துணை நிறுவனமான லங்கா ஐஓசியும் எரிபொருளின் சில்லறை விலையை உயர்த்தியுள்ளது.
ஆட்டோ, கார், பேருந்து கட்டணம் உயர்வு
எல்ஐஓசியின் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் குப்தா கூறுகையில் ‘‘சிபிசிக்கு ஏற்றவாறு நாங்கள் எங்கள் விலைகளை உயர்த்தியுள்ளோம்’’ எனக் கூறினார்.
இந்த விலை உயர்வை தொடர்ந்து பேருந்து, ஆட்டோ, வாடகை கார் கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்ள்ளது. முதல் கிலோமீட்டருக்கு 90 ரூபாயும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 80 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்படும் என்று ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.