குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம், மேல வழுத்துார் கிராமத்தில், ஆற்றங்கரை காஞ்சி காமாட்சியம்மன் கோவில், இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவில். விரைவில் நடிகை நயன்தாராவை திருமணம் செய்ய உள்ள விக்னேஷ் சிவன், அவருடன் நேற்று மதியம் இந்த கோவிலுக்கு வந்தார். நயன்தாரா கோவில் பிரகாரத்தில் பொங்கல் வைத்தார்.
தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. கருவறையில் இருந்த காமாட்சியம்மன், குப்பாயி, மகமாயி உள்ளிட்ட தெய்வங்களை இருவரும் வழிபட்டனர். நயன்தாரா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்து, கிராம மக்கள், இளைஞர்கள் கூட்டம் அதிகம் வந்திருந்தது. இரண்டு மணி நேரம், கோவிலில் இருந்த கிராம மக்களுடன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ரசிகர்கள், நடிகை நயன்தாராவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டினர்.
நடிகை நயன்தாராவை, விக்னேஷ் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் கவனம் செலுத்தினார். அங்கிருந்து, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு அவர்கள் சென்றனர். கோவிலில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் யானைக்கு வாழைப்பழம் வழங்கி, ஆசிர்வாதம் பெற்றனர். அரைமணி நேரத்திற்கு பின், இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.