திருவனந்தபுரம் : கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் இன்று தனது 77 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து இந்தியாவில் இடதுசாரிகள் ஆளும் ஒரே மாநிலம் என்ற பெருமையை தன் வசப்படுத்தியவர் பினராயி விஜயன். இவர் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், என் அன்புள்ள தோழரும் மாண்புமிகு கேரள முதலமைச்சருமான பினராயி விஜயன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையை காட்டவும் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.இதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன், மார்க்சிஸத்தின் தலை மாணாக்கர், அனைவர் நலனையும் அவாவுபவர், கேரள முதல்வர், வயதுக்கு மரியாதையைக் கூட்டுபவர், என் இனிய நண்பர் பினராயி விஜயன்அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.