பியோங்யாங்: வட கொரியாவில் கரோனா நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று முதன்முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால், இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வட கொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. வட கொரியாவில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியது.
இந்நிலையில், எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வகை கரோனா தொற்று காரணமாக வட கொரியாவில் முதல் கோவிட்-19 பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ராணுவம் மூலம் நாட்டு மக்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.
சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் நடந்த பிரமாண்ட ராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கரோனா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
\
வடகொரியாவில் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 68 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், வட கொரியாவில் தற்போது கரோனா கட்டுக்குள் உள்ளதாக, அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வட கொரிய அரசு ஊடகத்தில், “நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வட கொரியாவில் கரோனாவினால் ஏற்படும் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. அத்துடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; தொற்று எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கரோனா தற்போது கட்டுக்குள் உள்ளது. கரோனாவுக்கு எதிராக வட கொரியா சிறப்பாக செயல்பட்டுள்ளது” என்று அதிபர் கிம் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரியாவில் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. குறிப்பாக, கரோனா வைரஸை கண்டறியும் ஆய்வகங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்தச் சூழலில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வட கொரியாவுக்கு உதவ தயார் என்று தென் கொரியா, அமெரிக்கா தெரிவித்தன. ஆனால், இதனை வட கொரியா ஏற்று கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.