`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' – நீதிமன்றம் காட்டம்

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளோ, நடனங்களோ இருக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தி, சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சித்திரை மாதம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில்களிலும் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாக்களில் காலம் காலமாக கலாச்சார ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.
image
இதனால் காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க தர கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட மனுக்கள் விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க… பிரபல ஹரியானா பாடகி மாயம்: 12 நாட்களுக்கு பிறகு சடலமாக உடல் மீட்பு – நடந்தது என்ன?
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி தமிழ்ச்செல்வி, பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆடல் பாடல் நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு பேணப்பட வேண்டும். எந்த பிரச்சினையும் வராது என மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்க வேண்டும். ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தவோ, ஆபாசமான நடனங்கள் ஆடவோ கூடாது. இந்த நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தி, சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.