தொழில்நுட்பத்தின் இதயத் துடிப்புதான் பொருட்களின் இணையம் (Internet of Things – IOT). ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் இணையத்தால் தொடர்புகொள்வது, தேவையான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுதான் பொருட்களின் இணையம்.
இன்றைய காலகட்டத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயத்துக்குத் தேவைப்படும் தண்ணீர்ப் பயன்பாட்டை IOT மூலம் 50% முதல் 75% வரை குறைத்து, தண்ணீரை வீணாக்காமல் விவசாயத்தை எளிதாகச் செய்வதற்கான வழிவகை இந்த IOT-ல் கிடைத்திருக்கிறது. மேலும், பயிருக்கு ஊட்டச்சத்துகள் தேவையா என்பதை உணர்ந்து, அதற்குத் தேவையான உரங்களை, தேவையான காலத்தில், தேவையான அளவு கொடுப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் நமக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது.
விவசாயிகள் இரவு நேரத்தில் வயலுக்குத் தண்ணீர் மோட்டாரைப் போட்டுவிட்டு, வயலுக்குத் தேவையான அளவு தண்ணீர் செல்லும் வரை உறங்கிக்கொண்டிருப்பார்கள். சில நேரத்தில் நன்கு உறங்கிவிட்டால், தேவையான அளவைவிட அதிக அளவு தண்ணீர் நிரம்பிவிடும், பயிர்களும் வீணாக வாய்ப்பு உண்டு. IOT தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியும். வயலில் தேவையான அளவு நீர் நிரம்பிய உடன், பல்வேறு உணரிகள் உதவியுடன் மோட்டார் தானாகவே இயக்கத்தை நிறுத்திவிடும். அதுபோல, விவசாயிகள் வயல்களின் கள நிலைமையை எங்கிருந்தும் கண்காணிக்க முடியும். இந்த வினைதிறன்மிக்க வேளாண்மை பெரிய விவசாயத்தில் மட்டுமல்லாமல், அங்கக வேளாண்மை, சிறு, குறு, நடுத்தர வேளாண்மையிலும் பேருதவி புரியும்.
துல்லிய வேளாண் முறையில் பொருட்களின் இணையத்தின் முக்கியமான பயன்பாடு பயிர் அளவீட்டு முறை (Crop metrics) என்பதாகும். இது துல்லியமாக அதி நவீன வேளாண் முறைகளுக்குத் தேவையான தீர்வுகளை அளிக்கிறது.
பயிர் அளவீட்டு முறையானது IOT தொழில்நுட்பத்தில் உள்ள உணரிகள் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வுசெய்து, என்ன வகையான பயிர்களைப் பயிரிடலாம்; விளைச்சலை மேம்படுத்துவது எனப் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் துல்லிய விவசாயத்தில் பயன்படுகிறது. பயிர் வள மதிப்பீடு, நீர்ப்பாசனம், பயிர்க் கண்காணிப்பு, பயிர் தெளித்தல், நடவு செய்தல், மண் மற்றும் களப் பகுப்பாய்வு ஆகிய பயன்பாடுகளுக்கும், நிலத்தடி சார்ந்த ட்ரோன்கள் மற்றும் வான்வழி சார்ந்த ட்ரோன்கள் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ட்ரோன்களின் மூலம் பயிர்களின் வளத்தை இருந்த இடத்தில் இருந்துகொண்டே கண்காணிக்க இயலும். மேலும், பயிர்களின் தன்மையை எளிதாக ஆராய்ந்து சிறப்பான திட்டமிடலுக்கு இந்த ட்ரோன்கள் விவசாயத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் IOT-யின் பங்கு அளப்பரியது.
> இது, பா.சிதம்பரராஜன், க.சண்முகம் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்