தைவான் மீது போர் தொடுக்க தயார் நிலையில் சீன ராணுவம்- அதிபர் ஜின்பிங் பேசிய ஆடியோவால் பரபரப்பு

பீஜிங்:
தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறி வருகிறது.
தைவானை அச்சுறுத்தும் விதமாக அந்நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து வருகின்றன. தென்சீன கடல் பகுதியில் சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே தேவை ஏற்பட்டால் தைவான் மீது ராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தைவான் மீது தாக்குதல் நடத்த ராணுவம் தயாராக உள்ளது என்று சீன அதிபர் ஜின்பிங் பேசும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 57 நிமிடங்கள் ஓடும் இந்த ஆடியோவை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சி அரசின் மூத்த ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கசிய விட்டுள்ளனர் என்று யூடியூப் சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த ஆடியோவில், 1.40 லட்சம் ராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார் படுத்துமாறு சீன அதிபர் ஜின்பிங் பேசி உள்ளார். மேலும் ஆடியோவில் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி செயலாளர், துணை செயலாளர், கவர்னர், துணை கவர்னர் ஆகியோர் பேசியதும் இடம் பெற்றுள்ளது.
1.40 லட்சம் வீரர்கள், 953 கப்பல்கள் 1,653 ஆளில்லாமல் இயங்கும் கருவிகள், 20 விமான நிலையங்கள், 6 கப்பல் கட்டுதல் மற்றும் பழுது நீக்கம் மையங்கள், 14 அவசர கால பரிமாற்ற மையங்கள், உணவு தானிய கிடங்குகள், ஆஸ்பத்திரிகள், ரத்த சேகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள், கியாஸ் நிரப்பும் நிலையங்களை தயார்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நடந்து வரும் குவாட் அமைப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோபைடன், தைவான் மீது படையெடுத்தால் சீனாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களம் இறங்கும் என்று நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த ஆடியோ வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.