மும்பை: பண மோசடி தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள மஹாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான நவாப் மாலிக்கிற்கு, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் நிறுவனமான ‘டி கம்பெனியுடன்’ தொடர்பு உள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், நவாப் மாலிக்கிற்கு உள்ள தொடர்பு குறித்து விரிவாக விளக்கியுள்ளனர்.
நாடு முழுவதும், மும்பையில், நிழல் உலக தாதாக்களின் பணபரிவர்த்தனை குறித்து, தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனாவின் மகன் அலிஷா பார்கரிடம் அமலாக்கத்துறையினர் நேற்று( மே 23) விசாரணை நடத்தினர்.
அப்போது, நவாப் மாலிக் மீதான பணமோசடி வழக்கு தொடர்பாக அலிஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.அதில் அலி ஷா கூறியுள்ளதாவது: தனது தாயார் ஹசீனா, 2014ல் இறக்கும் வரை, தாவூத் இப்ராஹிமுடன் நீண்ட நாட்கள் பணபரிவர்த்தனை செய்து வந்தார். அவரும், வெங்காய வணிகத்தில் ஈடுபட்ட சலீம் பாட்டீலும், கட்டடம் வாங்குவது குறித்த பேசி வந்தனர். குர்லா மேற்கு பகுதியில் உள்ள கோவாலா கட்டடத்தில் ஏற்பட்ட பிரச்னையை தீர்த்து வைத்த இருவரும், அங்கு ஒரு பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து அலுவலகம் திறந்தனர். ஹசினா, அந்த கட்டடத்தில், தனது கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியை நவாப் மாலிக்கிற்கு விற்பனை செய்தார். அதில், நடந்த பணப்பரிமாற்றம் குறித்து எனக்கு தெரியாது. இவ்வாறு அதில், அலி ஷா கூறியுள்ளார்.
நவாப் மாலிக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு எடுத்து கொண்ட சிறப்பு நீதிமன்றம் கோவாலா கட்டடத்தை அபகரிக்க மற்றவர்களுடன் இணைந்து பண மோசடி மற்றும் சதியில் நேரடியாகவும், தெரிந்தே நவாப் மாலிக் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளதாக கூறியுள்ளது. மேலும், அவருக்கு எதிராகவும், 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி ஷாவாலி கானுக்கு எதிராகவும் விசாரணை நடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement