சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலா ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஒப்பந்தங்களுக்கு 1 சதவிகிதம் கமிஷன் கேட்டதாக புகார் எழுந்த நிலையில் ஆதாரங்கள் கிடைத்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பெருபான்மை பலத்துடன் ஆம் ஆம்தி கட்சி வெற்றி பெற்றது.இதனையடுத்து, முதல்வராக பகவந்த் மான் தேர்வு செய்யப்பட்டார். முதலமைச்சராக பதவி ஏற்றதுமே, அமைச்சர்கள் பற்றி ஊழல் புகார் தெரிவிக்கலாம். ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக, வாட்ஸ் அப் எண்களையும் அறிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ஊழலற்ற ஆட்சியை கொண்டுவருவோம் என்பதை ஆம் ஆம்தி கட்சி மையப்படுத்தி இருந்தது. இந்நிலையில், பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா அரசு ஒப்பந்தங்களுக்கு ஒரு சதவீதம் கமிஷன் கேட்டதாக புகார் எழுந்தது. ஊழல் குற்றச்சாட்டை அடுத்து விஜய் சிங்லாவை சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி முதல்வர் பகவந்த் மான் உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்டதாக எழுந்த புகாரில் ஆதாரங்கள் கிடைத்ததால் விஜய் சிங்லாவை போலீசார் கைதுள்ளனர்.