ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தனது அமைச்சரவையின் சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய் சிங்லாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார்.
ஒப்பந்ததாரர்களிடம் ஒரு சதவீதம் கமிஷன் கோரியதாக எழுந்த புகாரில் அவரை பதவி நீக்கம் செய்வதாக பகவந்த் மான் அறிவித்துள்ளார். மேலும், விஜய் சிங்லா மீதான புகாரை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் உள்ளதாலேயே இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக முதல்வர் பகவந்த் மான் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆம் ஆத்மி நேர்மையான கட்சி. எங்கள் அரசு ஒரு ரூபாய் ஊழலைக் கூட பொறுத்துக் கொள்ளாது. மாநிலத்தின் மக்களின் கண்களின் இப்போதுதான் நம்பிக்கை தெரிகிறது. ஊழலில் இருந்து யார் தங்களை மீட்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்தபோதே அரவிந்த் கேஜ்ரிவால் ஊழல் தடுப்பு இலக்கை தெளிவாக எடுத்துரைத்திருந்தார். நானும் அதற்கேற்றவாறு செயல்படுவேன் என்று உறுதி அளித்திருந்தேன்.
இந்தச் சூழலில் தான் அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு என் பார்வைக்கு வந்தது. ஊடகங்களுக்கு இது தெரியவரவில்லை. நான் நினைத்திருந்தால் அதை மூடி மறைத்திருக்கலாம். ஆனால், என்னை, ஆம் ஆத்மியை நம்பிய லட்சக்கணக்கான மக்களை ஏமாற்ற மாட்டேன். அதனால் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
விஜய் சிங்லா தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாகவும் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி இவ்வாறாக அமைச்சரை பதவி நீக்கம் செய்வது புதிதல்ல. 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி உணவு வழங்கல் துறை அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த வழக்கை கேஜ்ரிவால் சிபிஐயிடம் விசாரணைக்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.