2022-ம் ஆண்டின் ‘உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களின்’ பட்டியலை ‘டைம்’ இதழ் சமீபத்தில் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் கௌதம் அதானி, கருணா நந்தி மற்றும் குர்ரம் பர்வேஸ் ஆகிய மூன்று இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள பெண்ணான கருணா நந்தி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவிவரும் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/jTw2FbWe.jpg)
பெண்களின் உரிமைக்காகப் போராடி வரும் இவர், சமூக செயற்பாட்டாளரும்கூட.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், பணியிடங்களில் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் சட்ட ரீதியாகப் போராடி வருகிறார். திருமண வல்லுறவுக்கு தண்டனையில் இருந்து சட்ட விலக்கு அளிக்கும் சட்டப் பிரிவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/Untitled.png)
ஒருபக்கம் சட்ட ரீதியான போராட்டத்தை நடத்திக்கொண்டே, மறுபுறம் மக்கள் சட்டங்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். ஒருவரின் சட்டபூர்வ உரிமைகள் நெறிக்கப்படும்போது, எளிதாக சட்டத்தைப் புரிந்து கொண்டு செயலாற்ற தன்னுடைய இந்த முயற்சி உதவும் என நம்புகிறார்.
போபாலில் பிறந்து , டெல்லியில் வளர்ந்தவர் கருணா. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பையும் முடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.