![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653407050_NTLRG_20220524150838082199.jpg)
திருமணத்திற்கு பிறகு ஆனந்தி நடிக்கும் தமிழ் படம்
பொறியாளன் படத்தில் அறிமுகமானாலும் கயல் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஆனந்தி. அதன்பிறகு சண்டி வீரன், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, கமலி பிரம் நடுகாவேரி, ரூபாய், பண்டிகை, மன்னர் வகையறா உள்பட பல படங்களில் நடித்தார்.
இவர் நடித்து முடித்துள்ள 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும், அலாவுதீனின் அற்புத கேமரா' ஆகிய படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதற்கிடையே சாக்ரட்டீஸ் என்ற இணை இயக்குனரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். திருமணத்திற்கு பிறகு தெலுங்கில் வெளியான ஸ்ரீதேவி சோடா செண்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தமிழில் ‛ஒயிட் ரோஸ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ஆர்.கே.சுரேசும், ரூசோ என்ற புதுமுகமும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ்.ஆர்.ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் ஆர். கே .சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் ராஜசேகர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான படமாக உருவாகிறது. என்றார்.