ஐரோப்பாவில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு கொண்டாட்டங்களின் ஊடாக உலக நாடுகளில் குரங்கம்மை என அறியப்படும் Monkeypox பரவியிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் காணப்பட்ட Monkeypox தொற்றானது ஐரோப்பா மற்றும் கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தற்போது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஐரோப்பாவில் Monkeypox தொற்று வேகமெடுக்க காரணம் என்ன என்பது தொடர்பில் Dr David Heymann விளக்கமளித்துள்ளார்.
அதில், Monkeypox தொற்றாளர் ஒருவருடன் நெருக்கமாக பழகினால் மட்டுமே மற்றவர்களுக்கும் அந்த நோய் பரவும் என்பது இதுவரையான கண்டறிதல் என குறிப்பிட்டுள்ள அவர்,
பாலியல் தொடர்பு தான் தற்போது குரங்கம்மை பரவலை அதிகரித்துள்ளது போல் தெரிகிறது என்றார்.
மட்டுமின்றி, ஸ்பெயின் நாட்டில் உலகெங்கிலும் இருந்து 80,000 பேர் கலந்துகொண்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் விழாவில் பங்கேற்றவர்களில் Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெல்ஜியத்தில் நான்கு நாட்கள் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றவர்களில் மூவருக்கு Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாட்ரிட் நகரில் நீராவிக் குளியலில் ஈடுபட்ட பலருக்கு Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை ஸ்பெயின் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
இருப்பினும் பாலியல் தொடர்பு தான் தொற்று பரவ காரணமா என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் தரப்பு இதுவரை இறுதி முடிவுக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் குறைந்தது 172 பேர்களுக்கு இதுவரை Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் உட்பட 17 நாடுகளில் மேலும் 87 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் மட்டும் ஒரே நாளில் 37 பேர்களுக்கு Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 57 என அதிகரித்துள்ளது.
ஆனால், எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கலாம் என சுகாதரா நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.