போபால்: மத்திய பிரதேசத்தில் தொழிலதிபரின் காரை சேதப்படுத்தி போதையில் ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் ரோஹ்தாஷ் சிங் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். மத்திய பிரதேச மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஹுக்கும் சிங் கரடாவின் மகன் ரோஹ்தாஷ் சிங், போபால் – இந்தூர் நெடுஞ்சாலையில் காரில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் கார் மீது அவரது கார் மோதியது. அதிர்ச்சியடைந்த தொழிலதிபர், காரை சரியாக ஓட்டிச் செல்லும்படி ரோஹ்தாஷ் சிங்கிடம் கூறியுள்ளனர். ஆனால் போதையில் இருந்த ரோஹ்தாஷ் சிங், தொழிலதிபரின் காரை தாக்கினார். காரின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அனில் யாதவ் கூறுகையில், ‘முன்னாள் அமைச்சரின் மகன் போதையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். தொழிலதிபரின் கார் மீது மோதியதும், அவர்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், தொழிலதிபரின் காரை சேதப்படுத்தி உள்ளார். அவரது காரில் மதுபான பாட்டில்கள் இருந்தன. அதனால் தொழிலதிபர் அஹுஜா அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 184, 279, 294 மற்றும் 352 ஆகியவற்றின் கீழ் ரோஹ்தாஷ் சிங் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார். எம்எல்ஏவின் மகன் போதையில் விபத்து ஏற்படுத்திய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.