உத்தரப்பிரதேசத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக 15 வயது சிறுவன் ஒருவன் ‘ஆட்சேபனைக்குரிய’ பதிவையும், முதல்வரின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளான். இது தொடர்பாக சஹாஸ்வான் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து சிறுவனுக்கு எதிரான இந்த வழக்கு மொராதாபாத்தில் உள்ள சிறார் நீதி வாரியத் (ஜேஜபி) தலைவர் அஞ்சல் அதானா, உறுப்பினர்கள் பிரமிளா குப்தா, அரவிந்த் குமார் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறுவன் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இது தொடர்பாக அரசு கூடுதல் வழக்கறிஞர் அதுல் சிங் ஊடகங்களிடம், “குற்றம்சாட்டப்பட்ட சிறுவன், சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் செய்தியுடன் முதலமைச்சரின் மார்பிங் படத்தைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் சிறுவனுக்கு எதிராக ஐ.பி.சி-யின் பிரிவு 505 (public mischief) மற்றும் ஐ.டி சட்டத்தின் பிரிவு 67 உடன் சேர்த்து வழக்கு பதியப்பட்டது. அதனால். அவர் சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.
ஆனால், வயதைக் கருத்தில் கொண்டு, இது அவரின் முதல் குற்றம் என்று கருதி, ஜே.ஜே.பி உறுப்பினர்கள் 15 வயது சிறுவன் பசுக்கள் காப்பகத்தில் 15 நாள்கள் சமூக சேவை செய்ய வேண்டும். 15 நாள்களுக்கு பொது இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். மேலும், ஐ.டி சட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கின்றனர்” என்றார்.