திமுக ஆட்சி ஒருபோதும் ஆன்மிகத்துக்கு எதிராக இருந்ததில்லை; இருக்கப்போவதுமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆன்மிகத்தின் பெயரால் சிலர் திமுக ஆட்சி மீது குறை சொல்லத்தொடங்கியுள்ளார்கள். மக்களுக்கு சேவை செய்யவே நேரம் போதவில்லை என்பதால் தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சேலம் மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சருக்கு வெள்ளி செங்கோல் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், ’’தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்றபோது தமிழகத்தின் நிதி நிலை அதலபாதாளத்தில் மிகவும் கவலைப்படும் படியாக இருந்தது. தமிழகத்திற்கு ரூபாய் 6 லட்சம் கோடி கடன் சுமை இருந்தது. அதனால் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று நினைத்தேன். ஆனால் இந்த ஓராண்டில் நிலைமையை மாற்றியுள்ளோம். துவண்டு கிடந்த தமிழ்நாடு தற்போது துள்ளி எழுந்திருக்கிறது; நிர்மூலமாக இருந்த நிர்வாகம் இப்போது நிமிர்ந்து நிற்கிறது; தமிழகம் தற்போது தலைநிமிர்ந்து நிற்கிறது என்பதை தலைநிமிர்ந்து சொல்வேன்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆட்சி முடியும் வரை உழவர்களைப்பற்றி சிந்திக்காமல் தங்கள் விருப்பப்படியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார்கள். ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதியும், நடப்பாண்டில் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மே மாதத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இயற்கையே இந்த ஆட்சிக்கு கைகொடுக்கும் விதமாகத்தான் மழை பெய்தது. தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்தன் அடையாளமாகத்தான் மண் வளம் செழித்து உணவு உற்பத்தி அதிகரித்துள்ளது.
மிகுந்த நல்லெண்ணத்தோடு நல்லாட்சியை உருவாக்கியவர்கள் மக்கள்; அதை நிறைவேற்றும் கருவி நான். தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்துவிட்டது என்பது இந்தியாவுக்கு தெரிந்துவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்துவிட்டது, உலகத்துக்கே புரிந்த போதிலும் இங்கிருக்கும் சிலருக்கு புரியவில்லை என்பது வேதனையாக உள்ளது. குறை சொல்வதற்கு ஏதும் இல்லை என்ற காரணத்தால் ஆன்மிகத்தின் பெயரால் குறை சொல்லத்தொடங்கி உள்ளார்கள். திமுக ஒருபோதும் ஆன்மிகத்துக்கு எதிராக இருந்ததில்லை; இருக்கப்போவதுமில்லை. கடந்த ஓராண்டில் அறநிலையத்துறையில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நான் எனது இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். தேவையில்லாத விமர்சனங்களுக்கு யாருக்கும் பதில் சொல்ல நேரமில்லை.
பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்து ஓராண்டு ஆகிவிட்டது; ஆனால் ஒன்றிய அரசு இப்போதுதான் குறைத்துள்ளது. பெட்ரோல் விலை குறைப்பின் மூலம் தமிழக அரசுக்கு ரூ. 1160 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது; அது மக்களுக்கான சலுகையாக அரசு ஏற்றுக்கொண்டது. ஏற்கனவே பெட்ரோல் விலையை பன்மடங்கு ஏற்றிவிட்டு தற்போது சிறிதளவு குறைத்துள்ளார்கள். ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ. 21760 கோடி நிலுவைத்தொகை வழங்கப்டவில்லை. திராவிட மாடல் யாரையும் பிரிக்காது; ஒன்று சேர்க்கும். தற்போது நடப்பது ஒரு கட்சியின் அரசு அல்ல; ஒரு இனத்தின் அரசு.
இல்லாததை கட்டவிழ்த்து பார்க்கும் பலருக்கு இருப்பதை கண்திறந்து பார்க்க முடியவில்லை. திமுகவுக்கு எதிராக எத்தனை விஷ பரப்புரை செய்தாலும் ஒருபோதும் வீழ்த்த முடியாது’’ என்று கூறிய முதலமைச்சர் முக ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த ஜவுளிப் பூங்கா, கொலுசு உற்பத்தி மையம், ஐடி பூங்கா விரைவில் தொடங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், எடப்பாடி சட்டமன்ற தொகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் விரிவுப்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM