கொழும்பு : பெட்ரோலிய பொருட்கள் வாங்க, இந்தியாவிடம், 3,750 கோடி ரூபாய் கடன் கேட்கும் தீர்மானத்திற்கு, இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:அமைச்சரவை கூட்டத்தில், எரிசக்தி அமைச்சகம், இந்திய எக்சிம் வங்கியிடம் இருந்து, 3,750 கோடி ரூபாய் கடன் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தொகை, பெட்ரோலிய பொருட்கள் வாங்க பயன்படுத்தி கொள்ளப்படும். இலங்கை அரசு ஏற்கனவே இதற்காக, இந்திய எக்சிம் வங்கியிடம், 3,750 கோடி ரூபாயும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து, 1,500 கோடி ரூபாயும் கடன் வாங்கியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியா, இலங்கைக்கு 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஏற்கனவே, 4 கோடி கிலோ டீசல் அனுப்பிய நிலையில், மேலும், 4 கோடி கிலோ பெட்ரோல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இந்தியா தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இலங்கை அரசு நேற்று, பெட்ரோல், டீசல் விலை முறையே, 24 சதவீதம் மற்றும் 38 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 82 ரூபாயும், டீசலுக்கு, 111 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்., 19க்குப் பின், இரண்டாவது முறையாக, பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது, வரலாறு காணாத விலை உயர்வாகும். இதன்படி, இலங்கை ரூபாய் மதிப்பில், ஒரு லிட்டர் பெட்ரோல், 420 ரூபாய்; டீசல், 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை, இந்திய ரூபாயில் மதிப்பிட்டால், ஒரு லிட்டர் பெட்ரோல், 90 ரூபாயாகவும்; டீசல், 85 ரூபாயாகவும் இருக்கும்.