ஸ்ரீநகர்: காஷ்மீரில் தனது 7 வயது மகளை டியூசனுக்கு விட சென்ற போலீஸ்காரரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதில், மகளும் படுகாயமடைந்தார். காஷ்மீரில் கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்கள், போலீஸ்காரர்கள், பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பண்டிட் பிரிவை சேர்ந்த ராகுல் பட் என்பவரை, தீவிரவாதிகள் அலுவலகத்தில் நுழைந்து சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து பண்டிட் பிரிவை சேர்ந்த அரசு ஊழியர்கள் நேற்றும் போராட்டம் நடத்தினர். பட்டை கொன்ற மறுநாள், போலீஸ்காரர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள சவுரா என்ற இடத்தில் வசிக்கும் சைபுல்லா குவாத்ரி என்ற போலீஸ்காரர், தனது 7 வயது மகளை டியூசனில் விடுவதற்காக அழைத்துச் சென்றார். அப்போது, வீட்டுக்கு வெளியே காத்திருந்த தீவிரவாதிகள் அவர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், சைபுல்லா சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய மகள் மீதும் குண்டுகள் பாய்ந்தன. படுகாயமடைந்த அவள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறாள். * 9 தீவிரவாதிகள் சிக்கினர்காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் தீவிரவாதிகள் செயல்படுவதாக பாதுகாப்பு படைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 8 தீவிரவாதிகள் சிக்கினர். அவர்களில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதேபோல், மகராஷ்டிரா மாநிலம் புனேவில் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவன் சிக்கினான்.