டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தக் கொடூரச் செயலை செய்த நபர் 18 வயது மதிக்கத்தக்க நபர் என்பதும், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் கவர்னர் கிரெக் அபோட் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹூஸ்டன் பகுதியில் உள்ள சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளியில் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.
அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் டெக்ஸாஸ் சம்பவமும் நிகழ்ந்துள்ளது அமெரிக்கர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ரைபிள் துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த அந்த வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர், ஒரு பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டனர். அதேநேரம் 18 வயது நபரும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.
ஜோ பைடன் இரங்கல்:
துப்பாக்கிச் சூட்டில் இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இது செயல்பட வேண்டிய நேரம். துப்பாக்கிச் சட்டங்களைத் தாமதிப்பவர்களுக்கு/தடுப்பவர்களுக்கு இந்தக் கொடூரத்தை தெரியப்படுத்த வேண்டும். அவர்களிடம், ஒரு தேசமாக, நாம் எப்போது துப்பாக்கி லாபிக்கு எதிராக நிற்கப் போகிறோம் என்று கேட்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.