'குரங்கு காய்ச்சல்' கொரோனா போல பெருந்தொற்றாக பரவுமா?

உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம்.

காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. எளிதாக இந்த நோய் பரவிவிடாது என்றாலும் நெருங்கிய உடல் தொடர்புகள், பாலுறவு போன்றவற்றினால் பரவும். மனிதர்களுக்கு இந்த வைரஸ் கண்கள், மூக்கு, வாய், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் வாயிலாக பரவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுவீடனில் இந்த தொற்று பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இந்த நோய் ஆபத்தான நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கு தொற்று பரவலை தடுப்பதற்கு கட்டுப்பாடு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்கு வழிவகுக்கும் என்று அந்த நாட்டின் சுகாதார மந்திரி லேனா ஹாலன்கிரென் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குரங்கு காய்ச்சல் கவலைக்குரிய ஒன்றுதான் என்று தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு தற்போதுதான் உலகம் வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில், குரங்கு காய்ச்சல் மீண்டும் கொரோனா போன்று பெருந்தொற்றாக பரவி விடுமோ என பரவலாக அச்சத்தை எழுப்பியுள்ளது.

ஆனால், நிச்சயமாக கொரோனா பெருந்தொற்று போல் குரங்கு காய்ச்சல் பரவல் இருக்காது என்று அமெரிக்காவின் முன்னணி மருத்துவ நிபுணர் வெளியிட்டு இருக்கும் தகவல், மக்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவரும் முன்னணி மருத்துவ நிபுணருமான பஹீம் யூனுஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இது பற்றி விரிவாக பதிலளித்துள்ளார்.

அவர் கூறும் போது, குரங்கு காய்ச்சல் பாதிப்பு கவலைக்குரியது என்றாலும், கொரோனா போன்று பெருந்தொற்றாக பரவும் வாய்ப்பு முற்றிலும் இல்லை. ஏனென்றால், இது நாவல் வகையை சேர்ந்தது கிடையாது. பொதுவாக இது ஆபத்தானது கிடையாது. கொரோனாவை விட இது சற்றும் தீவிரம் குறைந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இது உள்ளது. சின்னம்மைக்கு போடப்படும் தடுப்பூசி மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும்” எனத்தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாம்..
.அமெரிக்காவில் பயங்கரம் – தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் பலி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.