சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான முதலாவது இளைஞர் திறன் விழா, சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று நடக்கிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் அரசு துறைகளையும் தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா, சென்னை ராணி மேரி கல்லூரியில் மே 25-ம் தேதி (இன்று) நடக்கிறது.
இந்த விழாவில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை அரங்குகளை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார். அத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளையும் முதல்வர் வழங்குகிறார்.
கலந்தாய்வு கூடங்கள்
இளைஞர் திறன் திருவிழாவில், இளைஞர்களுக்கு திறன் பயிற்சி ஆலோசனைகளை வழங்க கலந்தாய்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு தொழில்துறைகளில் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், வேலைவாய்ப்புகள் குறித்து தொழில் துறை வல்லுநர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
விழாவில் பங்கேற்க விரும்பும் இளைஞர்களுக்காக நிகழ்ச்சி நடக்கும் இடத்திலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் திறன் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள சுயஉதவிக்குழு மகளிர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை கண்காட்சி 29-ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.