முதலமைச்சராகும் வாய்ப்பு நெருங்கி வந்த நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார் சசிகலா. எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றஅவர் திரும்பி வந்தபோது ஆட்சியும் கிடைக்கவில்லை, கட்சியும் கிடைக்கவில்லை. எனினும் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்த நிலையில், தற்போது மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அண்மையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலா, தான் அதிமுகவில் இணைவது உறுதி, திமுக ஆட்சியில் மக்கள் கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தற்போது, ஆன்மிக சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அரசியல் கட்சி பிரமுகர்களையும் இடையிடைய சந்தித்து வருகிறார்.
இதற்கிடையே, சசிகலாவுக்கும், பாஜகவைச் சேர்ந்த நடிகை விஜயசாந்திக்கும் நல்ல நட்பு உண்டு. சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவை விஜயசாந்தி சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்பட்டாலும், தனது தலைமையில் அதிமுக இயங்குவதற்கு பாஜக தலைமை உதவ வேண்டும், அதற்கு உள்துறை அமைச்சர் அப்பாயிண்ட்மென்ட் வாங்கித் தர வேண்டும் என விஜயசாந்தியிடம் சசிகலா கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு தாம் முடிந்த அளவு முயற்சிப்பதாக சொன்ன விஜயசாந்தி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இது பற்றி பேச முயற்சித்தும் முடியவில்லையாம். இதை சசிகலாவிடம் விஜயசாந்தி கூற அவர் அப்செட் ஆகி விட்டாரம்.
இந்நிலையில், கடந்த வாரம் சசிகலாவை விஜயசாந்தி ரகசியமாக சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சசிகலாவுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய பல தகவல்களை அவர் கூறியதாகத் தெரிகிறது. குறிப்பாக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பிறகு அதற்கான வேலைகள் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனையொட்டி முதன்முறையாக டெல்லிக்கு சசிகலா செல்ல உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in