திருச்செந்தூர் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக ரூபாய் 200 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என இந்து சமயத் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், “திருச்செந்தூர் கோவிலுக்கு காவடி எடுத்து வருபவர்கள், அலகு குத்தி வருபவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் விரைவு தரிசனம் செய்வதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டு HCL நிறுவனத்துடன் இணைந்து சுமார் 200 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இது போன்று தரிசனம் குறித்த புகார்கள் வராது என இந்து சமய அறநிலை துறை கருதுகிறது” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், “திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. அடுத்த மாதம் 6 ம் தேதி (6.7.2022 ) அன்று உறையூர் வெக்காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற உள்ளது” என்றார்.
இதையும் படிங்க… கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
முன்னதாக இன்று காலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயில், 108 திவ்ய தேசங்களில் நான்காவது திவ்ய தேசமான லால்குடி வட்டம் மேல் அன்பில் கிராமம் அருள்மிகு சுந்தராஜபெருமாள் திருக்கோயிலின் “திருத்தேர்” வெள்ளோட்ட விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM