சேலம்:
இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (யு.ஜி)-2022 நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் வருகிற ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்கியது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் கடந்த 6-ந்தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்த வாரம் 15-ந் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது. மேலும் 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியது.
கடைசி நாளான 20-ந்தேதி அன்று நாடு முழுவதிலும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். குறிப்பாக தமிழகத்தில் திரளான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை திருத்த, விண்ணப்பதாரர்களுக்கு தேசிய தேர்வு முகமை வாய்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை நாளை மறுநாள் வரை (24 முதல் 27-ந்தேதி இரவு 9 மணி வரை) திருத்தங்களைச் செய்ய விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்பிறகு, விவரங்களில் எந்தத் திருத்தமும் செய்ய முடியாது.