கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச் சாலையில் நின்றிருந்த லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்- சீர்காழி புறவழிச் சாலையில் கூத்தன்கோவில் என்ற இடத்தில் திண்டிவனத்தில் இருந்து ஜல்லி ஏற்றிக் கொண்டு காரைக்காலுக்கு சென்ற லாரி நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சேலத்தில் இருந்து டைல்ஸ் மற்றும் கிரானைட் ஏற்றிக் கொண்ட சீர்காழி நோக்கி அதிவேகத்தில் சென்ற மினி லாரி இன்று(மே.25) அதிகாலை சுமார் 2.45 மணியளவில் எதிர்பாரதவிதமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி மீது மோதியது. இதில் மினி லாரி முற்றிலுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த மினிலாரி ஓட்டுனர் நகுலேஸ்வரன்( 25), மினி லாரியின் முன்னால் உட்காந்திருந்த சேலம் தம்மம்பட்டியை சேர்ந்த செல்வக்குமார்(38), செல்வகுமாரின் மைத்துனி கற்பகவள்ளி(27), செல்வக்குமாரின் 3 வயது குழந்தை மிதுன் உள்ளிட்ட 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மினி லாரியில் பின் பகுதியில் இருந்த சேலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்(34), கருப்பசாமி(45), பெருமாள் (53)ஆகியோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவலறிந்த அண்ணாமலை நகர் போலீஸார் உயிரிழந்தவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மினி லாரி ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் வாகன இயக்கியதால் விபத்து நடத்திருக்கலாம் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சிதம்பரம்- சீர்காழி புறவழிச்சாலையில் கூத்தன்கோவில் பகுதியில் சாலையோரம் அதிக லாரிகள் நிறுத்தப்படுகிறது. அந்த பகுதியில் அதிக வளைவுகள் உள்ளதால், விபத்துக்கள் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால்
விபத்து ஏற்படாத வகையில் சாலையோரங்களில் லாரிகள் நிறுத்த ரோந்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.