பதினாறு ஆண்டுகளுக்கு முன், சென்னை தெருக்களில் இருபது வயது வாலிபர் ஒருவர் சுற்றி அலைந்து கொண்டிருந்தார். அவருக்குச் சொந்த ஊர் மதுரை. இருநூற்றைம்பது ரூபாய் பணத்தோடும், தன் குரல் மீதுள்ள நம்பிக்கையோடும் சென்னை வந்தார்.
திரும்பி மதுரைக்குப் போக பணத்தை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு ஸ்டூடியோ ஸ்டூடியோவாக அலைந்தார். இசையமைப் பாளர்களின் வீடு வீடாக ஏறி இறங்கினார். படத்தில் பாட ‘சான்ஸ்’ கேட்டார். ‘சான்ஸ்’ கிடைக்கவில்லை. கையிலிருக்கும் பணமும் குறைந்து கொண்டே வந்தது. ஆனால், நம்பிக்கை மட்டும் குறையவில்லை. ஒரு நாளைக்கு ஒரே வேளை சாப்பிட்டுக்கொண்டு, சென்னையைச் சுற்றிச் சுற்றி வந்தார்.
கடைசியில் மனம் நொந்துபோய், அப்போது கொலம்பியா கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருந்த கே.வி.மகாதேவனிடம் சென்று முறையிட்டார். மகாதேவன், அப்போது பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் சுதர்ஸனத்தைப் பார்க்கச்சொன்னார்.
இளைஞர், சுதர்ஸனத்தைப் பார்த்தார். ”பாட ‘சான்ஸ்’ கேட்டு உங்ககிட்டே தினமும் பலபேர் வருவாங்க! நான் அப்படி வரலை.
ஒரு பத்து நிமிஷம் நான் பாடறதைக் கேளுங்க! கேட்ட பிறகு, நான் சென்னையில் இருந்து பின்னணி பாட்டுக்கு முயற்சி செய்யலாமா? அல்லது ஊருக்குத் திரும்பிப் போயிடலாமானு சொல்லுங்க. அதுபோதும்!” என்று கெஞ்சினார்.
சுதர்ஸனம் சம்மதித்து பாடச்சொன்னார். அந்த இளைஞரின் இனிமையான குரல், அவரை மெய்ம்மறக்கச் செய்தது.
உடனே, ஏவி.எம். செட்டியாரிடம் அந்த இளைஞரை அழைத்துச் சென்றார். செட்டியாரின் முன் அம்பாளைப் பற்றிய பக்திப்பாடல் ஒன்றைப் பாடினார் இளைஞர்.
”சூனா தானா! தம்பிக்கு குரல் நல்லா இருக்குதே! நல்லா பாடுதே! நம்ப படத்திலே ரெண்டு பாட்டு கொடுத்துடுங்க!” என்றார் செட்டியார்.
துள்ளிக்குதித்தார் இளைஞர். சென்னை, சினிமா உலகின் முதல் படியில் காலை வைத்தார்.
அவர் ஏவி.எம். படத்திற்காகப் பாடிய முதல் பாட்டு ‘போடணும்… குல்லா போடணும்…!’
சென்னையில் முதன்முதலாக ராசிக்கார பெரிய இடத்தில் அவர் போட்ட ‘குல்லா’ மின்னல் வேகத்தில் அவரை முன்னேற வைத்தது. அந்த இளைஞர்தான் டி.எம்.சௌந்தரராஜன்!
அது அவருடைய முதல் பாடல் அல்ல; சென்னை வருவதற்கு முன்பு ஜூபிடரிலும் மாடர்ன் தியேட்டர்ஸிலும் சில பாட்டுக்கள் பாடியிருக்கிறார்.
முதன்முதலில் ஜூபிடரில் பாடிய ஐந்து பாட்டுக்களுக்கு இவருக்குக் கிடைத்த ஊதியம் 625 ரூபாய்!’
அன்னமிட்ட வீட்டிலே’ என்று ‘மந்திரி குமாரி’யில் இடம் பெற்ற பாடல் இவர் பாடியதுதான். ஆனால், டைட்டிலில் இவருடைய பெயர் இடம் பெறாததால் ரொம்பப் பேர் அதைத் திருச்சி லோகநாதன் பாடியதென்றே நினைத்துக்கொண்டிருந்தார்களாம்!
இவர் முதன்முதலில் சினிமாவில் பாடிய பாட்டு, ‘ராதே என்னை விட்டுப் போகாதேடி…’ என்ற பாட்டுதான்!
”முறைப்படி யாரிடம் சங்கீதம் கத்துக்கிட்டீங்க?”
”பூச்சி சீனிவாச ஐயங்கார் அவர்களின் சீடரான காரைக்குடி ராஜாமணி அவர்களின் சிஷ்யன் நான்” என்றார் பெருமையுடன்.
”இதுவரை எத்தனை பாட்டுக்கள் பாடியிருக்கிறீர்கள்?”
”661 திரைப்படங்களில் சுமார் மூவாயிரம் பாட்டுக்களுக்கு மேல் பாடியிருக்கிறேன்! அது தவிர, தனியாக பக்திப் பாடல்கள் சுமார் முந்நூறு பாடியிருக்கி றேன்!”
”எப்படி இவ்வளவு சரியாகக் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
”என்ன பாட்டு, எந்த கம்பெனிக்கு, எப்போது, யாருடைய இசையமைப்பில் பாடினேன் என்று நோட்டில் எழுதி வைத்திருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே, அதை எடுத்துவர தன் இடுப்பிலிருந்த சாவிக் கொத்தை எடுத்து, தன் மனைவி சுமித்திரா தேவியிடம் கொடுத்தார்.
”ஐந்நூறு படங்களையும் தாண்டிவிட்டீர்களே, ஏன் விழா கொண்டாடவில்லை?”
”நானா? மாட்டேன்! எனக்கு ஆயிரம் படங்கள் முடிந்த பிறகு யாரோ விழா கொண்டாடப் போவதாகப் பேசிக் கொண்டார் கள்!”
”நீங்கள் பாடி, அதிகம் விற்பனையான இசைத் தட்டுகள் எவை?”
”முன்பு ‘ஏரிக்கரையின் மேலே போறவளே’ என்று ‘முதலாளி’ படத்தில் நான் பாடியது. சமீபத்தில் ‘திருவிளையாட’லில் நான் பாடிய ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாட்டு!”
”உங்களுக்கு இப்போது எத்தனை குழந்தைகள்?”
”ஐந்து! சித்திரலேகா, சந்திரிகா, மல்லிகா ஆகிய மூன்று பெண்கள்; பாலராஜன், செல்வகுமாரன் இரண்டு பிள்ளைகள். பெரிய பெண்களுக்கு அடுத்த வருடம் திருமணம் செய்து வைத்து விடலாம் என்று இருக்கிறேன். மற்றவர்கள் படிக்கிறார்கள்.”கணவர் கேட்ட நோட்டுப் புத்தகத்துடன் சுமித்திரா தேவி வருகிறார்.
”கல்யாணத்திற்கு முன்பே உங்கள் கணவரின் பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா?” என்று அவரிடம் கேட்கிறோம்.
”ஓ! நாங்க இருந்த தெருவிலேயே கச்சேரி பண்ணியிருக்கார்!””அப்பொழுதே இவரைத்தான் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்துவிட்டீர்களா?”அமைதியாகச் சிரிக்கிறார்.சௌந்தரராஜனிடம் திரும்பு கிறோம்.
”உங்கள் குழந்தைகளைப் பாட வைக்கிறீர்களா?”
”அது அது ஆண்டவன் விட்ட வழி!”
”சினிமாவில் பாடும்போது, ஒவ்வொருவருக்குத் தகுந்தாற் போல் எப்படி குரலை மாற்றிக் கொள்கிறீர்கள்?”
”நான் கொஞ்சம் ‘மிமிக்ரி’ பண்ணுவேன். மூணு ஸ்தாயி யிலேயும் பாடுவேன்.
உதாரணமா, எம்.ஜி.ஆருக்குப் பாடுவதென்றால் அதிகமான ஸ்ருதியிலே ‘நேஸல் ஸவுண்’டோட பாடணும். சிவாஜிக்குப் பாடுவதென்றால் ‘பேஸ் வாய்ஸ்’லே அடிவயிற்றி லிருந்து பாடணும்…”
”உங்கள் பாட்டையே ரேடியோவில் கேட்பீர்களா?”
”ஓ… கேட்பேன்!”
”அப்போது என்ன நினைப் பீர்கள்?”
ஒரு நிமிஷம் மௌனமாக இருந்தார் டி.எம்.எஸ்! பின்பு நெகிழ்ச்சியான குரலில், ”ரேடியோவிலே ஒரு முறை தன் பெயரைக் கேட்டாலே பலருக்கு மகிழ்ச்சியாயிருக்கும். ஆனா, என் பேரைத் தினமும் எத்தனையோ முறை சொல்றாங்கன்னா. அதிலே நான் வெறுமனே சந்தோஷப் படறதுக்கும் மேலே ஏதோ ஒரு அபூர்வ பாக்கியம் இருக்கிறதா நான் நினைக்கிறேன். என் மூதாதையர்களில் யாரோ ஒருவர் செய்த தவமோ, புண்ணியமோதான் எனக்கு அப்படி ஒரு பாக்கியமா கனிஞ்சிருக்கு. எல்லாம் ஆண்டவன் அருள்! அதுக்கு மேலே ஒண்ணும் சொல்லத் தோணலை” என்றார்.
கடவுளைப் பற்றி பேச்சு வரும்போதெல்லாம். பக்கத்து அறையைக் காட்டு கிறார். அது பூஜை அறை. அங்கு பல கடவுள்களின் படங்களோடு புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் படங்களும் இருக்கின்றன.”எனக்கு சாயிபாபா பக்தி அதிகம். இதோ, அவர் எனக்காக வர வழைத்துக் கொடுத்த நவரத்தின மாலை!” என்று சொல்லிக்கொண்டே பகவான் சத்ய சாயிபாபா படத்தின் மீது போடப்பட்டிருந்த ஒரு மாலையை எடுத்துக் காட்டுகிறார்”இதோ, இந்த விக்கிரகங் களெல்லாம் அவர் கொடுத் ததுதான்! இதோ, இவை ஸ்ரீ நாராயண பாபா கொடுத் தவை” என்று உணர்ச்சி பொங்கக் கூறுகிறார் டி.எம்.எஸ்.
அந்த சுவாமி அறையில் ஒரு சோபாவும் இருக்கிறது. அதில் சில மலர்கள் தூவப்பட்டிருக்கின்றன.”சுவாமி சத்ய சாயிபாபா எங்க வீட்டுக்கு வந்தபோது இதிலேதான் உட்கார்ந்தார். இதை அப்படியே எடுத்து வைத்து பூஜை பண்றேன்!” என்றார் பக்திபூர்வமாக.”உங்களுக்கு கடவுள் பக்தி அதிகமாக இருக்கிறது!”
”பக்தி இருந்தால்தான் சங்கீதமும் இருக்க முடியும்! ‘சங்கீத ஞானமு பக்தி வினா’ன்னு ஐயர்வாள் சொல்லலையா?” என்றார்.
அவரிடமிருந்து விடைபெற்று வரும் போது, நம் மனத்தில் அவர் சிறந்த பின்னணிப் பாடகராக மட்டும் தோன்ற வில்லை; சுவாரஸ்யமான பேச்சாளராக, தத்துவ ஞானமும் அடக்கமும் நிறைந்த பக்திமானாகவும் நம் நினைவில் நிறைந்திருக்கிறார்.
– விகடன் டீம்
(29.06.1969 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து…)