ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் மாநில போலீஸ் பதக்கத்தில் உள்ள, தேசிய மாநாட்டு கட்சி நிறுவனர் ஷேக் அப்துல்லாவின் படத்தை நீக்குவது, வரலாற்றை அழிக்கும் முயற்சி என, அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் போலீசாருக்கு வழங்கப்படும் வீர தீர விருதுகள், பதக்கங்கள் ஆகியவற்றில் ஷேக் அப்துல்லாவின் படமும், ‘காஷ்மீர் சிங்கம்’ என்ற வார்த்தையும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் அரசு, போலீஸ் பதக்கங்களில் காஷ்மீர் சிங்கம் என்ற சொல்லை நீக்கி விட்டு போலீஸ் பதக்கம் என மாற்றியது.
இதையடுத்து ‘இனி போலீஸ் பதக்கங்களில் ஷேக் அப்துல்லாவின் படத்திற்கு பதிலாக தேசிய சின்னமான அசோக சக்கரம் பொறிக்கப்படும்’ என, காஷ்மீர் அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இது குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் இம்ரன் நபி தர் கூறியதாவது:போலீஸ் பதக்கத்தில் படம், பெயரை மாற்றுவதால் ஒன்றும் நிகழப் போவதில்லை. காஷ்மீர் முன்னாள் முதல்வரான ஷேக் அப்துல்லா, தொடர்ந்து மக்கள் மனங்களில் ஆட்சி செய்வார்.
காஷ்மீர் வரலாறு, அடையாளம், பாரம்பரியம் ஆகியவற்றை அழிக்க இத்தகைய மட்டமான முயற்சிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி பேசும்போது,”காஷ்மீர் வரலாற்றில் மிக முக்கியமானவரான ஷேக் அப்துல்லாவின் படத்தை போலீஸ் பதக்கத்தில் இருந்து நீக்குவதால், அவர் புகழ் மறைந்து விடாது,” என்றார்.
Advertisement