அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் Robb Elementary School எனும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 19 குழந்தைகள், ஒரு ஆசிரியர், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் என 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தக் கொடூரச் செயலை செய்த நபர் 18 வயது மதிக்கத்தக்க சல்வேடர் ரேமோஸ் என்பவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு அமெரிகக் அதிபர்
ஜோ பைடன்
கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு குடிமகனும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார். “எப்போது தான் நாம் அனைவருமே துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்கப்போகிறோம் என்று கேள்வி எழுப்பிய அவர், இன்னும் சிலர் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை உயர்வு!
ஒரு குழந்தையை இழப்பது பெற்றோருக்கு நீங்கா சோகம் என்று குறிப்பிட்ட அதிபர் ஜோ பைடன், “நான் 1972ஆம் ஆண்டில் ஒரு விபத்தில் என் மனைவியையும், மகளையும் இழந்தேன். 2015ஆம் ஆண்டில் என் மகன் புற்றுநோயால் இறந்தார். ஒரு குழந்தையை இழப்பது ஆன்மாவின் ஒரு துண்டை பிய்த்து எடுப்பதுபோன்று வலி தரும். நெஞ்சில் ஒரு வெறுமை ஏற்படும். ஏதோ ஒன்று உங்களை முழுவதுமாக உரிஞ்சு கொள்வதுபோல் இருக்கும்.” என்றும் வேதனை தெரிவித்தார்.
“நடந்தது எல்லாம் போதும். இதயம் நொறுங்கிவிட்டது. துணிந்து நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சூரிய அஸ்தமனம் வரை வெள்ளை மாளிகை மற்றும் பிற பொது கட்டிடங்களில் அமெரிக்கக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.