2019 முதல் 2021 ஆம் ஆண்டுகள் அடங்கிய காலகட்டத்தில் இறைச்சி உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிகையில் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வறிக்கையில் இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கம் பற்றி பல்வேறு ருசிகர தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றின் தொகுப்பு:
இறைச்சி உண்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: 2015-2016 காலகட்டத்தையும் 2019-2021 காலகட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியர்கள் இறைச்சி உண்ணும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் அனைத்து பிராந்தியங்களிலுமே இறைச்சி உணவை உண்போரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. தேசத்தில் தனிநபரின் வருமானம் அதிகரிக்கும்போது மக்கள் மத்தியில் புரத உணவு சாப்பிடும் போக்கு அதிகரிக்கும் என்பதற்கான சரியான உதாரணமாக இது பார்க்கப்படுகிறது.
2015-2016 காலகட்டத்தில் இறைச்சி உண்ணும் இந்துக்களின் எண்ணிக்கை 73.24 % ஆக இருந்தது. அது 2019-2021 காலத்தில் 77.95% ஆக அதிகரித்துள்ளது. மதமற்றவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்துவோர் மத்தியில் 2015-2016 காலகட்டத்தில் இறைச்சி உண்போர் சதவீதம் 98.11 ஆக இருந்தது. அண்மை ஆய்வில் அது 99.56% ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் ஒவ்வொரு மதம் சார்ந்தும் இறைச்சி உண்ணும் பழக்கம் பற்றிய புள்ளிவிவரம் அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
அரசியலை வென்ற இறைச்சி உணவு: 2015ல் உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக முகமது இக்லாக் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் இறைச்சி குறிப்பாக மாட்டிறைச்சி உண்பதை சுற்றி மிகப்பெரிய அரசியல் உருவானது. பள்ளிகளில் மதிய உணவில் முட்டை வழங்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது? இந்து மத திருவிழாக் காலங்களில் இறைச்சிக் கூடங்களை மூடிவைக்க வேண்டும் என்ற சர்ச்சை உருவானது. இத்தனை அரசியலுக்கு மத்தியிலும் பிழைத்துள்ளது இந்தியர்களின் இறைச்சி உண்ணும் பழக்கம்.
சரிவிகித உணவில் சறுக்கல் தான்.. இறைச்சி உண்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்திய மக்கள் அனைவரும் அன்றாடம் ஆரோக்கியமாக சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால், சரிவிகித உணவு உட்கொள்வதில் இந்தியா சறுக்கியுள்ளது தெரிகிறது. இந்தியர்கள் அன்றாட உணவு சரிவிகித உணவு என்ற நிலையை இன்னும் எட்டவில்லை என்பது உறுதியாகிறது. இந்திய ஆண்களில் சராசரியாக பாதிக்கும் மேற்பட்டோர் அன்றாடம் பால், தானியங்கள் உட்கொள்வதில்லை. அதேபோல் அன்றாடம் காய்கறி சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கையும் மிகமிகக் குறைவே. அன்றாடம் இறைச்சி, மீன், முட்டை சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. இதில் ஒரே ஆறுதல் 2015-2016 காலகட்டத்தைவிட 2019-2021ல் இந்திய ஆண்களின் சரிவிகித உணவுப் பழக்கவழக்கம் சொற்ப முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
உணவிலும் பாலின இடைவெளி: உணவு உட்கொள்வதிலும் இந்தியாவில் பாலின இடைவெளி இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்திய ஆண்களில் 4ல் ஒருவருக்கு ரத்த சோகை உள்ளது. பிஹார், சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், ஜார்க்கண்ட், அசாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ரத்தசோகை உள்ள பெண்களின் எண்ணிக்கை 60%க்கும் அதிகமாக உள்ளது.
பெருந்தொற்று உணபு பழக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதா? தேசிய குடும்ப நல ஆய்வானது இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதல் சுற்று ஜூன் 2019 தொடங்கி மார்ச் 2020 வரை நடந்தது. இதில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இரண்டாவது சுற்று செப்டம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை நடத்தப்பட்டது. இதில் 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நடந்தன. இதில் மார்ச் 25, 2020 தொடங்கி அமலான 68 நாட்கள் ஊரடங்கும் இருந்தது.
பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் இந்திய மக்களின் உணவுப் பழக்கத்தின் தரம் குறைந்துள்ளது. இதற்கு வருவாய் இழப்பு காரணமாக இருந்துள்ளது. பால், பழங்கள், தானியங்கள், இறைச்சி என பல்வேறு உணவுகளை உட்கொள்வதிலும் இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய சரிவு இருந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது.