சண்டிகர்: பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் சிங்லா நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து லஞ்ச வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரியில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றது. அந்த கட்சியின் மூத்த தலைவர் பகவந்த் மான் கடந்த மார்ச் 16-ம் தேதி மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். விஜய் சிங்லா, சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
சுகாதாரத் துறையின் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் அமைச்சர் விஜய் சிங்லா ஒரு சதவீதம் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தன. அவரை ரகசியமாக கண்காணிக்க உளவுத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டார். இதன்படி அமைச்சர் விஜய் சிங்லாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. அவரது தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆதாரங்களின்படி அமைச்சர் விஜய் சிங்லா லஞ்சம் பெறுவது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்வர் பகவந்த் மான், அமைச்சர் விஜய் சிங்லாவை சண்டிகரில் உள்ள தனது வீட்டுக்கு வரவழைத்தார். அவர் மீதான லஞ்ச புகார்களை கூறி அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்தார். அமைச்சர் விஜய் சிங்லா குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அமைச்சர் விஜய் சிங்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் கூறும்போது, “சுகாதாரத் துறையின் ஒப்பந்தங்கள் மற்றும் மருத்துவ கருவிகள் வாங்குவதில் விஜய் சிங்லா ஒரு சதவீதம் லஞ்சம் பெறுவதாக என்னிடம் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளுக்கோ, ஊடகங்களுக்கோ தெரியாது. எனினும் லஞ்ச விவகாரத்தை மூடி மறைக்க விரும்பவில்லை.
அமைச்சர் கைது
முறைப்படி விசாரணை நடத்தப்பட்டது. இதில் விஜய் சிங்லாவின் குற்றம் உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் பதவி நீக்கம்செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போர் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மொகாலி போலீஸார், லஞ்ச வழக்கில் விஜய் சிங்லாவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதுதொடர்பாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “முதல்வர் பகவந்த் மானை பாராட்டுகிறேன். அவரது லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை கண்கலங்க செய்கிறது. ஒட்டுமொத்த நாடும் ஆம் ஆத்மி குறித்து பெருமிதம் கொள்கிறது” என்று கூறியுள்ளார்.