தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சார்பில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் உயிர்ச்சூழல் பாதுகாப்புக் கருத்தரங்கம் தூத்துக்குடியில், கடந்த 24-ம் தேதி மாலையில் நடந்தது. இதில், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த மேதா பட்கர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான தொல்.திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், மே-17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, பச்சைத்தமிழகம் கட்சியின் தலைவர் உதயகுமாரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பினைச் சேர்ந்த சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உருவப்படங்களுக்கு மலர்தூவியும், மெழுகுவத்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. கருத்தரங்கில் 6 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ’முத்துநகர் படுகொலை’ ஆவணப்படத்தின் இயக்குநர் எம்.எஸ்.ராஜாவுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,“தூத்துக்குடி மண்ணையும், சுற்றுபுறத்தையும் சீர்குலைத்துக் கொண்டிருந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நச்சாலையை மக்களின் போராட்டத்தினால் இழுத்து மூட வைத்துள்ளோம்.
அந்த நச்சாலை மீண்டும் இயங்கக்கூடாது என்பதே நம் அனைவரின் நோக்கம். ஆனால், ஸ்டெர்லைட் எதிர்ப்புக்களத்தில் முன் நின்று போராடும் போராளிகளின் கூட்டமைப்பானது மூன்று அணியாகப் பிரிந்து கிடக்கிறது. நமக்குள்ளான இந்தப் பிரிவினை அந்த ஆலை நிர்வாகத்திற்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது எனவே, மூன்று கூட்டமைப்பினரும் ஒன்றிணைய வேண்டும்” என்ற வேண்டுகோளினை முன்வைத்தே பேச்சைத் தொடங்கினார், “ஒரு வீர வணக்க நிகழ்ச்சியையோ, ஆர்ப்பாட்டத்தையோ நடத்த இயலாச் சூழல் நிலவுகிறது.
அதனால்தான் உயிர்ச்சூழல் பாதுகாப்புக் கருத்தரங்கம் என்ற பெயரில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒருநபர் விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ-யின் இறுதி குற்ற அறிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 101 பேரின் பெயர்கள் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதில், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினரின் பெயர்களோ, அதற்கு உத்தரவிட்ட வருவாய்த்துறையினரின் பெயர்களோ குறிப்பிடப்படவில்லை என்பதுதான் வேடிக்கை. இத்தனை துயரங்கள் நடந்த பிறகும் மீண்டும் ஆலையை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது வேதாந்தா நிறுவனம். பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளைப்பற்றி நமக்குத் தெரியும்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் இதற்கென தனிச்சட்டம் இயற்ற வேண்டும், உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு வி.சி.க முழு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கிறது” என்றவர் இறுதியாக மீண்டும் “ஆலைக்கு எதிரான மூன்று கூட்டமைப்பினரும் ஒன்றிணைய வேண்டும். அடுத்த ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தினை இணைந்தே நடத்த வேண்டும்” எனச்சொல்லி முடித்தார்.
இறுதியாகப் பேசிய தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, “ஸ்டெர்லைட் உள்ளிட்ட இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மைப் பார்த்து கேட்பது வேலை வாய்ப்பு, வளர்ச்சி தேவை இல்லையா? என்பதுதான். நாம் உயிருரோட இருந்தால்தானே வாழ்வாதாரத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். இங்குப் போராட்டமே வாழ்வாதாரத்தைப் பற்றிதானே? வளர்ச்சி என்பது சுற்றுபுறச் சூழலை பாதுகாக்கும் விதமாக இருக்க வேண்டுமே தவிர அழிக்கும் விதமாக இருக்கக் கூடாது. இங்குப் பெரும்பாலானோர் வசதியற்றவர்கள்தான் வாழ்கிறார்கள் இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறும் அந்த மக்கள் அகதிகளாக வேறு இடங்களுக்குச் செல்ல இயலாதவர்கள். இந்த சமூகத்தை, அரசை ஆட்டிவிக்கும் சக்தியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. அந்த கார்ப்பரேட் ஸ்டெர்லைட் ஆலையை போராட்டத்தினால் மூடி வைக்கும் நிலையை நாம் உருவாக்கியுள்ளதே நமக்கு வெற்றிதான். தி.மு.க அரசு மக்களோடு நிற்கிறது. ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் அருணா ஜெகதீசன் இடைக்கால அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுத்தது தி.மு.க அரசு. இந்த ஆலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிலும் மக்களின் துணை நிற்கிறது தி.மு.க அரசு. தமிழகத்தில் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு இடமில்லை” என்றார்.