நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம் – முழு விவரம்

சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், அவரது பயண திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையில் நாளை ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

நாளை மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி  நாளை (மே 26) பிற்பகல் 3.55மணியளவில் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஐ.ஏ.எப், பி.பி.ஜே விமானத்தில் புறப்பட்டு, மாலை 5.10 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமரை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

பின்னர் 5.15 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் நேரு ஸ்டேடியம் செல்கிறார். அதைத்தொடர்ந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். விழாவின்போது,

  •  ரூ.760 கோடி செலவில் உலகத் தரத்தில் சீரமைக்கப்பட உள்ள எழும்பூர் இரயில் நிலைய சீரமைப்பு பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
  • ரூ.256 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் – செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு 3-வது பாதை.
  • ரூ.450 கோடி செலவில் 90.4 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மதுரை – தேனி அகலப்பாதை திட்டம்.
  • தாம்பரம் – செங்கல்பட்டு மற்றும் மதுரை – தேனி வழித் தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை.
  • எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் எரிவாயுவை கொண்டு செல்வதற்காக, 1,445 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,760 கோடி மதிப்பில் எண்ணூர் – திருவள்ளூர் – பெங்களூரு – புதுச்சேரி – நாகப்பட்டினம் – மதுரை – தூத்துக்குடி இடையே திரவ இயற்கை எரிவாயு பைப்லைன் தடம்.
  • பெங்களூரு – சென்னை 4 வழி விரைவுச்சாலையின் 3-ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல்.
  • சென்னையில் அமைய உள்ள மல்ட்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காவுக்கும் அடிக்கல்.
  • ஒசூர் – தருமபுரி இடையேயான 2-ம் & 3-ம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கும் அடிக்கல்.
  • மீன்சுருட்டி – சிதம்பரம் இடையிலான புதிய சாலைக்கு அடிக்கல்.
  • பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்.

இது தவிர, மத்திய நகர்ப்புற வீட்டுவசதித்துறை, மத்திய பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு துறை, ரயில்வே துறையின் சார்பில் முடிக்கப்பட்டுள்ள பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பின் நிகழ்ச்சி முடிந்து மாலை 7.05மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் இருந்து புறப்படும் பிரதமருக்கு, விமான நிலையம் செல்ல 3 வழிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அதே வேளையில் விமான நிலையம் செல்லும் இடைப்பட்ட நேரத்தில் பிரதமர் தமிழக முதலமைச்சர் இல்லத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும், அப்போது குடியரசுதலைவர் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என  தகவல்கள் பரவி வருகின்றன. இது அரசியல் விமர்சகர்களின் புருவங்களை உயர்த்தி உள்ளது.

தொடர்ந்து விமான நிலையம் செல்லும் பிரதமருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது, அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், சென்னை விமான நிலையத்தில் இருந்து 7.40மணியளவில் தனி விமானம் மூலம் பிரதமர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

26ந்தேதி சென்னை வரும் பிரதமர் 5 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்! அமைச்சர் வேலு தகவல்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.