இயக்குநர் பாலா – சூர்யாவின் கூட்டணியில் உருவாகி வரும் `சூர்யா-41′ படத்தின் பட்ஜெட் அதிகரித்ததன் காரணமாக மேற்கொண்டு படத்தின் படப்பிடிப்பு நடைபெறாது என்றும் படம் பாதியில் டிராப் ஆக உள்ளது என்றும் நேற்று திடீரென தகவல் பரவியது. அதேபோல் நாயகன் சூர்யாவுக்கும், இயக்குநர் பாலாவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து விசாரித்தோம்.
பாலாவின் இயக்கத்தில் சூர்யா ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு ‘சூர்யா-41’ல் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை கன்னியாகுமரியில் துவங்குவதற்கு முன்னர், “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” என சூர்யா தெரிவித்திருந்தார்.
கன்னியாகுமரி பகுதியில் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்த நிலையில் பாலாவுக்கும் சூர்யாவிற்கும் படப்பிடிப்பில் வாக்குவாதம், படப்பிடிப்பு பாதியில் நின்றது என்ற தகவல் பரவியது.
இந்தச் செய்தி வெளியானதும், சூர்யா தரப்பில் “ஜூன் மாதத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்க உள்ளது” என அறிவித்தார்கள். இந்நிலையில்தான் இப்போது மீண்டும் இப்படி ஒரு செய்தி கிளம்பியிருக்கிறது. இது குறித்து சூர்யாவின் வட்டாரத்தில் விசாரித்தோம்.
“இது தவறான தகவல். முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் சில வாரங்கள் நடந்த போது, சூர்யா உள்பட அத்தனை நடிகர்களின் காம்பினேஷன் காட்சிகள் இருந்தன. இருந்தபோதும், மிகக் குறைவான சீன்களே இதுவரை படமாக்கபட்டது என்றும், ஸ்பாட்டில் பர்ஃபெக்ஷன் என்ற பெயரில் ஒரே ஷாட்டையே பாலா மீண்டும் மீண்டும் எடுத்து வந்திருக்கிறார் என்றும் மறுநாளும் முதல்நாள் எடுத்த சீன்களுக்கான ஷாட்களே படமாக்கியதாகவும் சொல்கிறார்கள். ஆனால், இந்தப் படம் டிராப் ஆகவில்லை. ஸ்கிரிப்ட்டை நன்கு செதுக்கியபின், மீண்டும் இந்தப் படப்பிடிப்பு துவங்கப்படலாம் என்று சொல்கிறார்கள். அதேபோல செய்திகளில் வந்ததுபோல படத்தின் பட்ஜெட் எதுவும் அதிகமாகவில்லை. இதுவரை சில கோடிகளே செலவு செய்துள்ளனர்” என்கிறார்கள்.