தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளிகள் சாட்சிகளாகவே உள்ளனர்! சமூக ஆர்வலர் மேதா பட்கர்

தூத்துக்குடி:  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளிகள் சாட்சிகளாகவே உள்ளனர் , அவர்கள்மீது ஒரு எப்ஐஆர் கூட இல்லை என சமூக ஆர்வலர் மேதா பட்கர் தனது ஆதங்கத்தை கூறி உள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி  நடைபெற்ற போராட்டத்தின்போது,  துப்பாக்கி சூடு, தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த கொடூரமான துப்பாக்கி சூட சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிபிஐ காவல்துறையினர்,  துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையினர் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளை,  வெறுமனே சாட்சிகளாகவே சேர்த்துள்ளனர். உண்மையான குற்றவாளிகள் மீது ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில்,  தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் உயிர்ச் சூழல் காக்க களமாடி படுகொலையுண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நான்காம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் மற்றும் உயிர்ச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி  வருகை தந்த சமூக ஆர்வலர் மேதா பட்கர், அங்கு  நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றார்.  அப்போது உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், அமைதியான முறையில் போராடிய அப்பாவி மக்கள் மீது காவல் துறையினர் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் அப்பாவி மக்களை குற்றவாளிகளாக தெரிவித்துள்ளது. இதன்மூலம், சிபிஐ என்பது நடுநிலையான, நேர்மையான அமைப்பு இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஒரு காலத்தில் மக்கள் எந்த பிரச்சினை என்றாலும் சிபிஐ விசாரணை கோரினார்கள். ஆனால் தற்போது யாருமே சிபிஐ விசாரணையை கோருவதில்லை. ஆனால் தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது. சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையினர் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் வெறுமனே சாட்சிகளாகவே சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் மீது ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்பதையும் கடுமையாக கண்டிக்கிறோம்.

இந்த வழக்கு விசாரணை மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி கிடைத்துள்ளது. ஆனால் நீதி இன்னும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 பேருக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை.

ஸ்டெர்லைட் நிறுவனம் மகராஷ்டிரா மற்றும் குஜராத் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிறுவனமாகும். தூத்துக்குடி மக்களும் அந்த நிறுவனத்தை நிராகரித்துள்ளனர். அந்த நிறுவனம் மீண்டும் செயல்பட தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டால் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.